பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209

எல்லாப் பயத்தையும்விட மரண பயந்தான் பெரிது. பசியை மாற்றிக் கொள்ளலாம், சோற்றாலே. பிணியைத் தீர்த்துக் கொள்ளலாம், மருந்தாலே. பகையைப் போக்கிக் கொள்ளலாம், படைப் பலத்தாலே. பசிக்குப் பாதுகாப்பாக இருப்பது உணவு. பிணிக்குப் பாதுகாப்பாக உள்ளது மருந்து. பகைக்குப் பாதுகாப்பாக இருப்பது படை. இவை யாவுமே சிறிய பாதுகாப்புக்கள்; சிறு சேமங்கள்.

நாயைக் காவலாக வைக்கிறோம். அது தன் சக்திக்கு ஏற்ற அளவில்தான் நம்மைக் காப்பாற்றும். ஒருவன் துப்பாக்கியால் அதைச் சுட்டு விட்டால் என்ன செய்வது? காவல்காரனைப் பாதுகாவலுக்கு வைக்கிறோம். அவன் கையையும் காலையும் கட்டிப் போட்டு உருட்டி விட்டுத் திருடர்கள் கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். இத்தகைய பாதுகாப்புக்கள் சிறிய பாதுகாப்புக்கள். படையை ஓரரசன் பாதுகாப்புக்குத் திரட்டி வைத்திருந்தால் அவனை விடப் பெரிய படைஉடையவன் அந்தச் சிறுபடையை அழித்து விடுகிறான்.

யாராலும் தடுக்க முடியாத மரணத்தை எந்தப் படையும் மாற்ற முடியாது. அதை மாற்றுகிறவனே எல்லாரையும் விடப் பெரிய காவலன்; பெரிய பாதுகாப்பாளன். சிவபெருமானே அந்தச் செயலைச் செய்கிறவன். ஆகவே, அவன்தான் பெரிய பாதுகாப்பாளன்; பெருஞ் சேமம்.

"இறைவனாகிய பெருஞ் சேமத்தை நீ சேர்ந்து விட்டாய், அதனால் தான் உனக்குக் கவலை இல்லை; அச்சம் இல்லை; மகிழ்கிறாய்; மனிதரைப் போல இன்புறுகிறாய்; விளக்கம் பெறுகிறாய்.”

மகிழ்தி மடநெஞ்சே! மானிடரின் நீயும்
திகழ்தி பெருஞ் சேமம் சேர்ந்தாய்.

பெருஞ் சேமமாக உள்ள அந்தப் பெருமான் எப்படி இருக்கிருன்? அவன் எலும்பை அணிந்து கொண்டிருக்கிறான்.

நா—14