பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

மிகவும் பெரியவர்களின் என்பை அவர்கள் மீதுள்ள மதிப்பினால் அணிந்திருக்கிறான் என்று சொல்லலாமா? யாருடைய என்பாக இருந்தாலும், சிறிதும் இகழாமல், அதை எடுத்து அணிந்து கொண்டிருக்கிறான். மயானத்தைக் கோயிலாகக் கொண்டவனுக்கு அங்கே சுட்டபின் எஞ்சி நிற்கும் என்பே ஆபரணமாகிறது. அந்த என்புகளை அணிந்து கொண்டு யாருக்கும் நாணாமல் அவன் எங்கும் திரிந்து கொண்டிருக்கிறான்.

எல்லோருடைய எலும்பையும் அணிந்து கொண்டு, "யாவரும் முடிவில் இப்படி என்பு ஆவார்கள். நான் மாத்திரம் நித்தியன் என்பதைக் காட்டிக் கொண்டு அவன் திரிகிறான். அவன்தான் பெரிய பாதுகாப்பு. அவனை அடைந்து அவனுக்கு ஆட்பட்டதனால்தான் அவனுடைய பாதுகாப்புக் கிடைத்தது. அவனுக்கு ஆட்பட்ட அன்பு பேரன்பு. அதனால்தான் மகிழ்ந்து திகழும் நிலை உண்டாயிற்று.

இதோடு நின்றுவிடலாமா? இன்னும் நாம் அடைய வேண்டியது இருக்கிறது. என்றும் பொன்றாத இன்ப நிலையை அடைய வேண்டும். இதுவரைக்கும் வந்த நமக்கு வழி தெரிந்துவிட்டது. இடையிலே நின்றுவிடாமல் தொடர்ந்து செல்லவேண்டும். எந்தப் பேரன்பு நம்மை இந்தப் பெருஞ் சேம நிலைக்கு அழைத்து வந்ததோ, அதை இன்னும் பெருக்க வேண்டும்; அந்த அன்பு இன்னும் மிகுதியாக வேண்டும். அப்போது வழியின் முடிவை அடையலாம். வழி தெரியாமல் தொல்லைப்பட்ட காலம் போய்விட்டது. தடை வருமோ என்று அஞ்சிய காலம் போய்விட்டது. அச்சமும் கவலையும் ஐயமும் திரிபும் இல்லாத சேமமான இடத்துக்கு வந்தாயிற்று. இங்கே நின்றுவிடக் கூடாது. இதுவரையில் பேரன்பு கொண்டு வந்தாயிற்று. இனியும் அந்த அன்பைப் பெருக்கி, முடிந்த முடிவான நிலையை அடையவேண்டும்.