பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

மகிழ்தி மடநெஞ்சே! மானிடரின் நீயும்
திகழ்தி, பெருஞ்சேமம் சேர்ந்தாய்;-இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு.

[அறியாமை யுடையையாக இருந்த நெஞ்சே, முன்பு துன்புற்ற நீ இப்போது மகிழ்கிறாய்; பேயாகிவிட்டோமே, இனித் தாழ்ந்த நிலை வருமே என்று அஞ்சிய நீயும் மானிடரைப் போன்ற சிறப்பைப் பெற்று விளங்குகிறாய்! இதற்குக் காரணம், நீ பெரிய பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்துவிட்டாய். யாருடைய எலும்பாக இருந்தாலும் இது தொடுவதற்கும் உரியதன்று என்று பிறர் இகழ்வது போல இகழாமல் அதை அணிந்துகொண்டு ஊரூர்தோறும் பிச்சைக்காகத் திரிகிற இறைவருக்கு ஆளாகப் புகுந்ததற்குக் காரணமான பெரிய அன்பையே, இன்னும் பெருகச் செய்வாக.

மானிடரின்—மானிடரைப் போல. சேமம்—க்ஷேமம்; பாதுகாப்பு.]

அன்பு பெருகப் பெருக மேலும் மேலும் நன்மை உண்டாகும் என்பது கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியில் 31-ஆம் பாடல்.