பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32. திருமார்பின் நூல்


அம்மையார் சிவபெருமான் திருமேனியைப் பார்க்கிறார். அவருடைய சடையைப் பார்க்கிறார். அது செக்கச் செவேல் என்று இருக்கிறது. அதனால் பெருமானுக்குச் செஞ்சடையப்பன் என்ற திருநாமம் உண்டாயிற்று. திருப்பனந்தாளில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குச் செஞ்சடையப்பர் என்பது பெயர்; அருணஜடேசுவரர் என்று வடமொழியில் கூறுவார்கள். அந்தச் சடையின் செவ்வொளி எங்கும் பரவுகிறது. அதன் இடையே பிறையை அவன் அணிந்திருக்கிறான். அது மிகவும் இளம்பிறை. மேற்கில் செவ்வானத்தினிடையே சிறுபிறை தோன்றினால் எப்படி இருக்குமோ, அப்படிச் செவ்வொளி வீசும் சடைக்கு இடையே அந்தப் பிள்ளைப்பிறை இருக்கிறது. அதிலிருந்து கதிர்கள் வீசுகின்றன.

இப்போது இறைவனுடைய திருமார்பைப் பார்க்கிறார் அம்மையார். அங்கே பளிச்சென்று முப்புரிநூல் தெரிகிறது. சடையின் மேல் சிவப்புக்கு நடுவே வெண்பிறை தெளிவாகத் தெரிகிறது போல, சிவந்த திருமார்பில் வெண்மையான முப்புரிநூல் தெரிகிறது. இறைவன் திருமேனி செவ்வண்ணமானது. “சிவனெனும் பெயர் தனக்கே உடைய செம்மேனி எம்மான்” என்று அப்பர் சுவாமிகள் பாடியதைக் கேட்டிருக்கிறோமே! மேலே சிவப்புக்கு நடுவே வெண்மை; கீழேயும் சிவப்புக்கு நடுவே வெண்மை. ஆனால் மேலே வெண்மை சற்றுப் பெரிதாக இருக்கிறது. கீழே மெல்லியதாக இருக்கிறது. ஒருகால் மேலே இருக்கும் வெண்மைதான் இங்கே இழை ஓடுகிறதோ? இல்லை இல்லை; கதிர்களை உடைய பிறையிலிருந்து ஒரு கதிர் மார்பின் வழியே ஒழுகுகிறதோ? அதுதான் இவ்வளவு நீளமாக இருக்கிறது.’