பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214


இப்படி எல்லாம் அம்மையாருக்கு எண்ணம் ஓடியது. ‘எம்பெருமான் திருமார்பின் நூல் செஞ்சடைமேல் உள்ள பிள்ளைப் பிறையின் ஒரு கதிர் ஒழுகியதை ஒக்கும்’ என்று எண்ணினார்.

பெருகொளிய செஞ்சடைமேல் பிள்ளைப் பிறையுன்,
ஒருகதிரே போந்துஒழுகிற்று ஒக்கும்-தெரியின்,
...மார்பின் நூல்.

இப்போது சிவபெருமானைப் பற்றிச் சிந்திக்கிறார். அவர் தம் கண்ணாற் பார்த்ததை இப்படி ஒரு கற்பனைக் காட்சியாகச் சொன்னார். இனிக் கருத்தினால் அவன் இயல்பைக் காண்கிறார். இறைவன் எல்லாப் பொருளுக்கும் முதலில் நிற்பவன்.

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

என்று திருக்குறள் சொல்கிறது. அவனை முழுமுதல் என்றும், முதல்வன் என்றும், முதல் என்றும் பெரியோர் அழைக்கிறார்கள். அதுமட்டுமன்று; அவன் கண்ணாகவும் இருக்கிறான். கண் எல்லா உறுப்புக்களிலும் சிறந்தது. அப்படியே இறைவன் எல்லாரினும் சிறந்தவனாக இருக்கிறான். நமக்குப் பொருள்களின் வண்ணத்தையும் வடிவத்தையும் காட்டுவது கண்தான். இறைவன் நமக்கு எல்லாவற்றையும் காட்டுகிறவன். அவன் காட்டாவிட்டால் யாரும் எதையும் காண முடியாது.

"காண்பார் ஆர் கண்ணுதலாய்க் காட்டாக்காலே” என்று அப்பர் சொல்கிறார். ஆன்மாக்கள் இறைவன் காட்டக் காணுமேயன்றித் தாமே காணும் தன்மை உடையன அல்ல. முதலாகவும் இருக்கிறான்; கண்ணாகவும் இருக்கிறான்.