பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சாவாமல் வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இராது?

கடைந்தபோது முதவில் அமுதம் உண்டாகவில்லை. கற்பகம், சிந்தாமணி, திருமகள், ஐராவதம் முதலியவை எழுந்தன. அவரவர்கள் தங்கள் தங்களுக்கென்று அவற்றை எடுத்துக் கொண்டார்கள். அப்போதும் அவர்கள் இறைவனை நினைக்கவில்லை.

இன்னும் அமுதம் தோன்றவில்லை. அதற்குள் ஒரு பேராபத்து வந்து சூழ்ந்தது. ஆலகால நஞ்சு பாற்கடலில் தோன்றியது. அதன் வாடையே தேவர்களுக்கு மயக்கத்தைக் தந்தது. எல்லோரையும் அடியோடு அழித்துவிடும் உக்கிரத்தோடு அது எழுந்தது.

அப்போது யாவரும் அஞ்சி நடுங்கினர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். அந்த நிலையில் சிவபெருமானுடைய நினைவு வந்தது. உடனே தேவர்களெல்லாம் வேகமாக ஓடிப்போய் இறைவன் திருவடியில் வீழ்ந்து, “எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும். அமுதம் வராமற் போனலும் போகட்டும்! இந்த நஞ்சிலிருந்து நாங்கள் பிழைத்தாலே போதும்!” என்று முறையிட்டார்கள். "முன்பெல்லாம் என் நினைவு வரவில்லையோ? இப்போது மட்டும் என் உதவி வேண்டியிருக்கிறதோ?’ என்று அவன் சொல்லவில்லை. அவன் ஆசுதோஷன்; எல்லாவற்றையும் கணப் பொழுதில் மறந்து மகிழ்ச்சியடையவன்.

ஆகவே தேவர்கள்பால் அருள் சுரந்து அந்த நஞ்சை எடுத்து உண்டான். பக்கத்தில் இருந்த இறைவி பார்த்தாள். வெளியில் உள்ள அமரர் முதலியவர்களைக் கொல்லும் என்று இறைவன் அதை நுகர்ந்தான். அது அவள் வயிற்றுக்குட் சென்றால் அங்குள்ள உயிர்கள் அழியுமே! ஆதலால் அமங்கை இறைவன் கண்டததைக் கையாற் பிடித்து நஞ்சம் அங்கே தங்கும்படி செய்தாள். அதனால் ‘நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டம்’ ஆயிற்று இறைவன் திருக்கழுத்து.