பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

215


"கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம் கருகாவூர் சந்தை தானே"

என்பது திருத்தாண்டகம்.

இந்த இயல்பு அம்மையாரின் நினைவுக்கு வருகிறது.

முதற்கண்ணான்

பிறகு அவனுடைய அருட்செயல் நினைவுக்கு வருகிறது. திரிபுரசங்காரம் செய்தான் அவன். இரும்பு, வெள்ளி, பொன் என்ற மூன்று மதில்களையுடைய புரங்களுக்குத் தலைவர்களாக வாணன், வித்யுன்மாலி, தாரகாக்ஷன் என்ற அசுரர்கள் இருந்தார்கள். அந்த மூன்று புரங்களும் வானிலே பறந்து கொண்டிருந்தன. பறக்கும் கோட்டைகள் அவை. திடீரென்று அவை எங்கேனும் இறங்கிப் படியும். கீழிருந்த மக்கள் நசுங்கிப் போவார்.

அந்த அசுரர்களால் உண்டாகும் தீங்கை அறிந்து தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். அவன் சிரித்து அந்த முப்புரங்களையும் எரித்தான். திரிபுரங்களை அழித்தானேயன்றி அவற்றில் இருந்த அசுரர்களை அழிக்கவில்லை. அவர்கள் திருந்தியமையால் அவர்களுக்கு அருள்பாலித்து வாணனைத் தன் சந்நிதியில் முழவு வாசிப்பவனாகவும், மற்றவர்களை வாயில் காவலர்களாகவும் வைத்துக்கொண்டான்.

முப்புரங்களை எரித்து அசுரர்களை ஆட்கொண்ட செயல், பிறப்புக்குக் காரணமாகிய மும்மலங்களை அழித்து ஆன்மாக்களை ஆட்கொள்ளும் திருவருட்செயலைக் குறிப்பிக்கும் திருவிளையாடல்.

"முப்புரம் என்பது மும்மல காரியம்”

என்று திருமூலர் பாடுவர்.