பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33. கோலமும் வடிவும்


அறிவில் இரண்டு வகை உண்டு; நூலறிவு, வாலறிவு என்பன அவை. பல நூல்களைக் கற்று அதனால் பெறும் அறிவு நூலறிவு; அது மூளையைச் சார்ந்தது. அநுபவத்தோடு கூடி இறைவனிடம் ஈடுபடுவது வாலறிவு. அது இதயத்தோடு ஒட்டியது; ஆன்மலாபத்தைத் தருவது. நூலறிவை அபர ஞானம் என்றும், பரோட்ச ஞானம் என்றும் ஒரு வகையில் சொல்லலாம். அப்படியே வாலறிவைப் பர ஞானம் என்றும், அபரோட்ச ஞானம் என்றும் சொல்லலாம்.

இந்த இரண்டு அறிவையும் பற்றி ஒரு குறள் சொல்கிறது. கற்றதனால் உண்டாவது நூலறிவு: இறைவனை வணங்கி அருளநுபவம் பெறுவது வாலறிவு என்பதை அந்தக் குறள் உள்ளடக்கி வைத்திருக்கிறது.

“கற்றதனால் ஆய பயன்என்கொல், வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்”

என்பது அந்தக் குறள். கற்பது என்பது பயிற்சி அல்லது சாதனம்; அதனால் வரும் பயன் அல்லது சாத்தியம் வேறு. அது வாலறிவனுடைய நற்றாளைத் தொழுதல் என்று இந்தக் குறள் சொல்கிறது. இறைவனை வாலறிவன் என்பதனால் அவனைத் தொழுவதனால் வாலறிவு உண்டாகும் என்ற குறிப்பைத் தெரிந்து கொள்ளலாம். ‘பிறவிப் பிணிக்கு மருந்தாகலின் நற்றாள் என்றார்’ என்று பரிமேழலகர் எழுதுவார். கல்வி என்பது மிகப்பெரிய அளவுள்ளது. அதைக் கடலாகவே சொல்வர்; "கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும்” என்று மாணிக்கவாசகரும், 'ஆய்ந்தே கடந்தான் அறிவென்னும்