பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

221

நுழைபுலம்’ என்று சொல்வது வழக்கம். வெறும் நூலறிவு திட்பமானது; சடலத்தைப் போன்றது. வாலறிவு நுட்பமானது; உயிரைப் போன்றது.

நூலறிவுக்கு மேலே வாலறிவு என்பது என்ன? அது எங்கே தொடங்குகிறது?

'வாலறிவன் நற்றாள் தொழுவதே’ வாலறிவின் தொடக்கம். அப்படியானால் வாலறிவன் யார்? அவன் எப்படி இருப்பான்?

இதற்கு விடை சொல்கிறார் அம்மையார். என்னுடைய அநுபவத்தை நான் சொல்கிறேன். இறைவன் பல்வேறு வடிவங்களைக் கொண்டவன். அவனை அவரவர்கள் விரும்பிய வண்ணம் தொழலாம். எனக்கு அவனை எண்ணும் போதெல்லாம் அவனுடைய நீலமணி மிடறுதான் எல்லாவற்றுக்கும் மேலாக லந்து நிற்கிறது. தன்னிடம் வந்து சரணம் அடைந்த அமரர்கள், முன்பு தன்னை நினைக்காது பாற்கடலைக் கடைந்தார்களே என்று எண்ணாமல், இப்போதாவது வந்தார்களே என்று எண்ணி, அவர்கள் அழியாமல் இருப்பதற்காக ஆலால நஞ்சை உண்டு தன் அழகிய கழுத்தில் அதை வைத்து, நீலகண்டப் பெருமானாக இருக்கிறவன் அவன். நீலமணிமிடற்றானுடைய நீர்மையை எண்ண எண்ண என் உள்ளம் அவன்பால் ஈடுபடுகிறது. அவன் தன்னை அடைந்தார்களின் குற்றங்களை எளிதில் மன்னிப்பவன் என்பதும், அவர்களுக்கு வரும் மரணபயத்தைப் போக்குபவன் என்பதும், அவன் நஞ்சாலும் அழியாத நித்தியன் என்பதும், பிறர் அஞ்சி ஒதுங்கி ஓடச் செய்யும் நஞ்சு அணிகலனாவது போலப் பொல்லாதவர்களையும் நல்லவர்களாக ஏற்றுக் கொள்ளும் கருணையாளன் என்பதும் அவனுடைய நீர்மைகள் என்று அந்த மணிமிடறு காட்டுகிறது.'

நீலமணிமிடற்றான் நீர்மையே—மேல்உவந்தது.