பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



222

"நாங்கள் அந்த நீலகண்டப் பெருமானைப் போற்றினால்தான் நலம் உண்டாகுமா?’ என்று கேட்கிறோம்.

அவன் எத்தனையோ கோலங்களை உடையவன். அவன் அடியார்களுக்கு அருள் செய்வதற்காக மேற்கொள்ளும் கோலங்களுக்குக் கணக்கே இல்லை. எந்தக் கோலத்திலே எப்படி வழிபட்டாலும் வழிபடலாம். சிவபெருமான் என்பது அவன் உருவம். நடராஜன் என்பது ஒரு கோலம். தட்சிணாமூர்த்தி என்பது ஒரு கோலம். முருகன் என்பது ஒர் உருவம்; தண்டாயுதபாணி என்பது ஒரு கோலம்; ஆறுமுகன் என்பது ஒரு கோலம். எந்த மூர்த்தியை எந்தக் கோலத்திலே வழிபட்டாலும் வழிபடலாம். அவன் அந்த மூர்த்தியாக, அந்தக் கோலத்திலே வந்து அருள் புரிவான். அவன் தனக்கென்று ஒரு கோலமும் வடிவும் இல்லாவிட்டாலும் அடியார்களுக்காக எந்தக் கோலத்திலும் வருவான்; எந்த வடிவிலும் வருவான்.”

அடுத்த கேள்வி : "அவனை எப்படி வழிபடுவது?"

'தன்னலத்தை மறந்துவிட்டு இறைவனையே எண்ணிப் பூஜை செய்யலாம். பாடிப் பாடி உருகலாம்; உள்ளத்தே தியானித்து யோகம் செய்யலாம்: தலந்தோறும் சென்று வழிபடலாம்: இறைவன் திருக்கோயிற் பணி செய்து விழா நடத்தலாம்: பக்தர் கூட்டத்தோடு ஒன்றிப் பஜனை செய்யலாம். எல்லாம் ஈசுவரார்ப்பணமாகச் செய்யப்படுபவை ஆதலின் எல்லாமே தவத்தின் வகைகள். எது செய்தாலும் தவந்தான், சித்தசுத்தியோடு இறைவனை எண்ணிச் செய்வன எல்லாம் தவம். "சித்தம் சிவமாக்கிச் செய்வனவே தவமாக்கும் அத்தன்” என்று பாடுவார் மாணிக்கவாசகர்.

ஆகவே இறைவனை எந்த வடிவிலும் எந்தக் கோலத்திலும் வழிபடலாம். ஆனால் அந்த வழிபாடு தவமாக இருக்க வேண்டும். ஒருமைப்பட்ட மனத்தோடு எதற்கும் ஆசைப்படாமல் பக்தி பண்ணுவதே தவந்தான்.