பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223

எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்.

அல்வாறு இறைவனிடம் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் திருவருள் செய்வான். 'இன்ன வடிவில் என்னை வழிபட்டால்தான் அருள் செய்வேன்" என்று சொல்லமாட்டான். அவன் தனக்கென்று வரையறையாக ஒரு வடிவத்தை மட்டும் கொண்டிருந்தால் அதையே வழிபட வேண்டுமென்று வற்புறுத்துவான். அவன் தனக்கு என்று வடிவம் இல்லாதவன். என்றாலும் மனம் மொழி மெய்களை உடைய, மக்களை ஆட்கொள்வதற்காக அவன் பல்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறான்: பல திருநாமங்களை ஏற்கிறான்.

"ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இலார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ?”

என்று மணிவாசகர் பாடுவார்.

அவன் அவ்வாறு எடுக்கின்ற வடிவங்களும் கோலங்களும் ஒரு காலத்தோடு நின்றுவிட்டன என்று சொல்ல முடியாது. அந்த அந்தக் காலத்துக்கு ஏற்ப அந்த அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றபடி அவன் திருவவதாரம் செய்கிறான்; வடிவமும் திருநாமமும் ஏற்கிறான்.

உண்மையில் ஒவ்வொரு பக்தனுடைய உள்ளத்திலும் ஒவ்வொரு கோலத்தில் எழுந்தருளி இறைவன் அருள் சுரக்கிறான். பொதுவாகக் கண்ணன், முருகன், இராமன் என்று சொன்னாலும் அந்த அந்தப் பக்தனின் உள்ளக் கோயிலில் உறைகின்ற கண்ணன் வேறு; முருகன் வேறு; இராமன் வேறு. நாரதர் பதினாறாயிரம் கோபிமார் வீட்டிலும் ஒரே சமயத்தில் தனித்தனியே கண்ணன் ஒவ்வொரு கோலத்தில் இருந்து திருவிளையாடல் புரிந்ததைக் கண்டதாகப் பாகவதம் சொல் கிறது. அது இந்தக் கருத்தையே புலப்படுத்துகிறது.

ஆகவே இறைவனை எந்த வடிவில், எந்தக் கோலத்தில் வழிபட்டாலும் அவன் அந்த வடிவிலும் அந்தக் கோலத்திலும் வந்து அருள் செய்வான்.