பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே ஆம்.

ஒரு வேடன் ஒரு காட்டில் வாழ்ந்திருந்தான். ஒரு நாள் ஒரு பெரியவர் காட்டு வழியே வந்தபோது அவனைச் சந்தித்தார். அப்பா, நீ இப்படி நாள்தோறும் வேட்டையாடிப் பிராணி ஹிம்சை செய்து கொண்டிருந்தால் எப்படிக் கடைத்தேறுவாய்?’ என்று அவர் வேடனைக் கேட்டார். அவனுக்கு நல்ல காலம் வந்துவிட்டபடியால், "நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். "இதோ இந்தக் காட்டின் ஒரத்தில் ஒரு பர்ணசாலையில் ஒரு மகான் இருக்கிறார். அவரிடம் போ. அவரை உனக்குக் குருவாகக் கொள். அவர் ஏதாவது உபதேசமாகச் சொல்வார். அதைப் பிடித்துக் கொள்” என்று சொல்லிப் போய்விட்டார்.

வேடன் அந்தப் பர்ணசாலைக்குப் போனான் உள்ளே நுழைவதற்கு அச்சமாக இருந்தது. வெளியிலே காத்துக் கிடந்தான். அவர் வரவில்லை, மாலை நேரத்தில் ஒளிமங்கிய வேளையில் அவர் வெளியே வந்தார். வேடன் மரத்தின் பின்னாலிருந்தான். அவரைக் கண்டவுடன் அவரை, குரு என்று அழைக்க எண்ணினான். சரியாக வார்த்தை வரவில்லை. குர் என்றான். அந்த ஒலி மட்டும் காதில் விழுந்த முனிவர் ஏதோ பன்றி போலும் என்று எண்ணி, "பன்றி" என்றார். வேடன் அதையே உபதேசமாக எடுத்துக்கொண்டு போய் ஓரிடத்தில் உட்கார்ந்து தவம் செய்யத் தொடங்கினான். அன்ன ஆகாரம் இல்லாமல் தவம் செய்தான். "பன்றி, பன்றி” என்று சொல்லியும் பன்றியின் வடிவத்தை நினைந்தும் தவம் புரிந்தான். வேறு எந்த நினைவும் இல்லாமல் அதே தியானத்தில் இருந்தான்.

இறைவன் அவன் தவத்துக்கு இரங்கி வராகாவதார மூர்த்தியாக அவன் முன் தோன்றி, "உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். "நீ யார்?' என்று வேடன் கேட்டான். “நான்தான் நீ தியானித்த மூர்த்தி" என்றான்