பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225

இறைவன். "அப்படியானால் என் குருவினிடம் வா. அவர் தாம் எனக்கு உபதேசம் செய்தார். அவரைக் கேட்டுக் கொண்டு எனக்கு வேண்டுவதைச் சொல்கிறேன்” என்று அவன் புறப்பட்டான். இறைவன் அவனை அந்த வராக உருவத்தோடு பின் தொடர்ந்தான். குருவின் ஆசிரமத்தை அணுகினவுடன், "குருமூர்த்தியே, இதோ இது சொல்வது சரியா? நீங்கள் உபதேசித்த மந்திரத்துக்கு இதுதான் அர்த்தமா?” என்று கேட்டான். வராக மூர்த்தி அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன அப்பா சொல்கிறாய்?" என்று முனிவர் கேட்டார்.

"இதோ பன்றியாக வந்து நிற்கிறதே; இது நான் தன்னை நினைத்ததாகச் சொல்கிறது. உங்கள் உபதேசத்துக்கு இது வந்தது சரியா?” என்று கேட்டான் வேடன்.

“யாரைச் சொல்கிறாய்? இங்கே யாரும் இல்லையே!” என்றார் முனிவர்.

உடனே வராகமூர்த்தியிடம், "இவருக்கு நீ தெரியவில்லையாமே! இவருக்கு முன்னாலே வா’ என்று சொல்ல, எம்பெருமான் வராகக் கோலத்தை அந்த முனிவருக்கும் தெரியும்படி காட்டினார். முனிவர் ஆச்சரியத்தில் மூழ்கிப் பெருமானைக் கீழே விழுந்து வணங்கி, "எம்பெருமானே, உன்னுடைய கருணையை என்ன என்று சொல்வது?’ என்று கண்ணீர் வார நின்றார்.

பிறகு அப்பெருமான் இருவருக்கும் திருவருள் பாலித்தான்.

இது ஒரு பழங்கதை. இக்கதை, தீவிரமான முயற்சி உடையவனுக்கு எந்தக் கோலத்திலும் இறைவன் எழுந்தருளி வந்து கருணைபுரிவான் என்பதைக் காட்டுகிறது.

இந்தக் கருத்தையே அம்மையார் சொல்கிறார். சும்மா புத்தகத்தைப் படித்துலிட்டு, எனக்கு அது தெரியும், இது தெரியும் என்று பிதற்றித் திரிந்து கொண்டிருக்க வேண்டாம்.


நா.—15