பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

இறைவனை வழிபட்டுக் கரையேறப் பயிற்சி செய்ய வேண்டும். அந்த உலகத்தில் நுழைய வேண்டும். நான் நீலகண்டப் பெருமானையே எனக்குரிய மேலான மூர்த்தியாக மனமுவந்து ஏற்று வழிபடுகிறேன். நீங்கள் எந்தக் கோலத்திலும் எந்த வடிவிலும் வழிபடலாம். அந்த வழிபாடு முறுகிய பக்தியுடன் தவமாக அமைய வேண்டும். இங்கொரு காலும் அங்கொரு காலுமாக வைக்கக்கூடாது. அப்படித் தவம் செய்தால் இறைவன் அந்தக் கோலத்தோடு எழுந்தருளி நலம் செய்வான் என்று பாடுகிறார்,

நூல்அறிவு பேசி நுழைவுஇலா தார்திரிக!
நீல மணிமிடற்றான் நீர்மையே—மேல் உவந்தது
எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே ஆம்.

[நூலைக் கற்று அதனால் வந்த அறிவையே பெரிதாக எண்ணி வீண் பேச்கப் பேசி, நுட்பமான வாலறிவுலகத்தில் புகாதவர்கள் ஒருபயனும் பெறாமல் திரிந்து கொண்டே இருக்கட்டும். நீலமணி போன்ற திருக்கழுத்தையுடைய பெருமானுடைய அனந்த கல்யாண குணங்களின் தொகுதியே, நான் மேலாக உவந்து ஏற்று வழிபடுவது; இறைவனை எந்தக் கோலத்தில், எந்த வடிவாக எண்ணி, எத்தகைய தவம் செய்தாலும் அவன் அந்தக் கோலத்தில் அந்த வடிவுடையவனாகவே வந்து அருள்புரிவான்.

நுழைவு-வாலறிவுலகத்தில் புகுதல். நீர்மை-கல்யாண குணங்களின் தொகுதி; உவந்தது என்று ஒருமை முடிபு பெற்றது. ஆம்-ஆவான்; அந்தக் கோலத்தையும் அந்த உருவத்தையும் எடுத்து வந்து அருள் செய்வான் என்பது குறிப்பு.]

இறைவனை எந்த வடிவில் வழிபட்டாலும் அவன் அருள் கிடைக்கும் என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியின் 33-ஆவது பாட்டு இது.