பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



228

யிட்டுக் கொண்டார்கள். சிவபெருமான் திரிபுர சங்காரம் செய்யப் புறப்பட்டான்.

பூமியையே தேராகவும் சந்திர சூரியர்களையே தேர்ச் சக்கரங்களாகவும் நான்கு வேதங்களையே குதிரைகளாகவும் அமைத்து அந்தத் தேரில் ஏறினான். பிரமதேவன் தேரை ஒட்டும் சாரதியாக அமர்ந்தான்.

சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத்து ஆதிசேடனை நாணாகப் பூட்டித் திருமாலேயே அம்பாக வைத்துக்கொண்டு புறப்பட்டான். திரிபுரங்களை அணுகிய போது திருமாலுக்குச் சிறிதே தருக்கு உண்டாயிற்றாம். நாம் அம்பாக இருந்து திரிபுரத்தை அழிக்கப் போகிறோம். நம்மால்தான் திரிபுரசங்காரம் நிகழப்போகிறது என்று எண்ணினாராம். அதை அறிந்து சிவபெருமான் புன்னகை பூத்தான். அந்தப் புன்னகையின் ஒளி பட்டு மூன்று புரங்களும் அழிந்து விட்டன. மூன்று நகரங்கள் மட்டும் அழிந்தனவேயன்றி, அவற்றுக்குத் தலைவர்களாகிய அசுரர்கள் அழியவில்லை. தங்கள் புரங்கள் அழிந்தது கண்ட அந்த அசுரர்கள் சிவபெருமான் அடியை வணங்கித் தாம் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். இறைவன் அவர்களுக்கு அருள்புரிந்து வாணனைத் தன் திருக்கோயிலில் முழவு வாசிப்பவனாகவும், மற்ற இருவர்களையும் வாயில் காவலராகவும் இருக்கும்படி பணித்தான்.

இறைவன் நெற்றிக் கண்ணால் திரிபுரங்களே எரித்தான் என்றும், ஒர் அம்பை எய்து அழித்தான் என்றும் கூறுவதுண்டு.

புராணக் கதைகள் யாவும் உட்கருத்தை உடையவை. குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் சொல்லும்போது, “ஒரு நரி காக்கையைப் பார்த்து ஒரு பாட்டுப் பாடு என்று சொன்னதாம்” என்று சொல்வார்கள். நரி எப்படிப் பேசும்? நீதியைப் புலப்படுத்த இத்தகைய கதைகளைச் சொல்வது உலகத்தில் எல்லா நாடுகளிலும் வழக்கம். உயர்ந்த கருத்துக்களை நுட்ப