பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229


மாகச் சொன்னுல் விளங்காதென்று கதை வடிவில் சொல்வது புலவர்களின் இயல்பு. புரணங்கள் அத்தகையனவே. அவற்றைச் சிசுஸம்மிதம் என்பார்கள்; குழந்தைகளுக்கு உள்ளே கருத்தை வைத்துக் கதை சொல்வதுபோல அமைந்தவை என்பதனால் அவ்வாறு கூறுகிறார்கள்.

அப்படியானால் சிவபெருமான் முப்புரம் செற்றதற்கு என்ன கருத்து?

ஆன்மாவைக் கட்டுப்படுத்தும் பாசம் மும்மலம் எனப்படும். அவை ஆணவம், கன்மம், மாயை என்பன. இந்த மூன்றோடும் உயிர் இருக்கிறவரைக்கும் முத்தியை அடைய முடியாது. இவை நீங்கினால்தான் இறைவனோடு ஒன்றி அத்துவித முத்தியை அடையும். அந்த மும்மலத்தை ஞானத்தால் அழிக்கவேண்டும். மலம் அழியுமே அன்றி, அதனோடுள்ள ஆன்மா அழியாது. இறைவன் ஞானத்தைத் தந்து ஆன்மாக்களின் மலங்களை அழியச் செய்து, மோட்சத்தை அருளுவான்.

திரிபுரங்கள் மும்மலங்களைக் குறிப்பவை. அவற்றையுடைய அசுரர்கள் மலங்களோடு இணைந்த ஆன்மாக்கள். மும்மலத்தோடு இணைந்த உயிர் பிறவிதோறும் சுழன்று திரிந்து வரும். அசுரர்கள் பறந்து திரிந்தார்கள். இறைவன் திருவருளால் ஞான ஒளி உண்டாகும். சிவபெருமான் புன்முறுவல் பூக்க அந்த ஒளி திரிபுரங்களின்மேற் பட்டது. ஞானத்தால் மும்மலங்கள் அழியும். புன்முறுவலின் ஒளியால் திரிபுரங்கள் எரிந்தன. மலம் நீங்கிய ஆன்மா இறைவனை அடைந்து இன்புறும். திரிபுரம் அழித்தவுடன் அசுரர்கள் இறைவனைச் சார்ந்தார்கள்.

திரிபுரசங்காரத்தின் உட்பொருள் இது என்பதைத் திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறர்:

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் முடர்கள்;