பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230


முப்புர மாவது மும்மல காரியம்;
அப்புரம் எய்தமை யாரறி வாரே?

மூன்று மலங்களில் ஒன்று கன்மம். அதுவே, பிறப்புக்குக் காரணமாவது. அது நல்வினை, தீவினை என்று இருவகைப்படும்; புண்ணியம், பாவம் என்றும் சொல்வார்கள். அந்த வினைகளுக்குரிய இன்ப துன்பங்களை அநுபவித்துக் கழிக்கப் பிறவி எடுக்கவேண்டும். நல்வினைகூடப் பிறப்புக்குக் காரணந்தான். அதனால் இரண்டு வினைகளையும், "இருள்சேர் இருவினை” என்று திருவள்ளுவர் கூறுகிறார், நல்வினை பொன் விலங்கு போன்றது; தீவினை இரும்பு விலங்கு போன்றது. பொன் உயர்ந்ததே ஆனாலும் விலங்கு விலங்குதானே?

அப்படியானால், பெரியவர்கள், நல்ல வினைகளைச் செய்ய வேண்டும், புண்ணியத்தை ஈட்ட வேண்டும் என்று உபதேசிக்கிறார்களே, ஏன்? நாம் அதிகமாகத் தீவினைகளைத் செய்கிறோம். அவற்றை ஈடுகட்ட நல்வினை செய்ய வேண்டும். அப்போதுதான் வினைகள் இல்லாத சமநிலை வரும். கடன் நிரம்ப வாங்கினவன் தொழில் செய்து லாபம் சம்பாதித்துப் பொருளை ஈட்டினால் அதைக் கொண்டு கடனை அடைத்து விடலாம். பிறகு அவனுக்குத் தொல்லையே இராது. கடனுக்கு மேல் அதிகப் பணம் ஈட்டினால் அதை யாருக்காவது தானம் பண்ணிவிடலாம். அப்படியே, புண்ணியம் அதிகமாகச் செய்தால் பாவம் நீங்கிப் புண்ணியப் பயனாகிய சொர்க்க பதவி கிடைக்கும்; புண்ணியப் பயன் தீர்ந்தால் உலகிற் பிறந்து ஞானம் பெற்று இறைவன் திருவடியை அடையலாம்.

தீய வினையை வல்வினை என்றும் சொல்லலாம். அதனுடைய விளைவு துன்பம். இந்தப் பிறவியில் நல்ல செயல்களையே செய்கிறவனும் துன்பம் அடைகிறதைக் காண்கிறோம். அதற்குக் காரணம் என்ன? முற்பிறவியில் செய்த தீவினையின் பயனை இப்போது அநுபவிக்கிறான்.