பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



231

தீவினை சேராமல் இருக்க வேண்டுமானால் இறைவனை மூன்று கரணங்களாலும் வழிபட வேண்டும. பிறப்புக்குக் காரணமான நல்வினை, வல்வினை என்னும் இரண்டுமே இறைவனை வழிபடுபவர்களிடமிருந்து அகன்றுவிடும்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

என்பது திருக்குறள்.

இறைவனை வழிபடாதவர்கள் தீவினை செய்வதில் ஈடுபடுவார்கள். செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதும் தீவினைதான். இறைவனை ஏத்தாமல் இருப்பது கடமையை மறந்த பாவம். அது எப்படி என்று கேட்கலாம்.

‘இனிமேல் நமக்கு மோட்சப் பதவி கிடைக்க வேண்டும்’ என்று இறைவனை வழிபட்டுப் புகழ்வது கிடக்கட்டும். அவன் இதுவரைக்கும் நமக்குச் செய்த நன்மைகளை எண்ணி நாம் நன்றியறிவோடிருக்க வேண்டும். நமக்குத் தனு கரண புவன போகங்களைத் தந்து வாழ விட்டிருக்கிறானே, இந்த உபகாரத்தை நினைக்க வேண்டாமா? நாம் அவனுக்குத் தனு முதலியவற்றைத் தர முடியுமா? அவன் கைம்மாற்றை எதிர் பார்க்கிறதில்லை. நம்மால் அவனுக்கு எதையும் செய்ய முடியாது. பொன்னை அணிந்தவர்களுக்கு அந்தப் பொன்னணிகளால் அழகும், ஆபத்துக்கு உதவும் நன்மையும் உண்டாகும். ஆனால், அந்தப் பொன்னுக்கு அவர்களால் என்ன பயன்?

பொன்னால் ப்ரயோசனம் பொன்படைத்தாற்குண்டப்
பொன்படைத்தான்
தன்னால் ப்ரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு?அத்
தன்மையைப்போல்
உன்னால் ப்ரயோசனம் வேணதெல் லாமுண்டாம்
இங்குனக்கென்
தன்னால் ப்ரயோசனம் ஏதுண்டு காண்கச்சி ஏகம்பனே.

என்று பட்டினத்தார் பாடுவார்.