பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



232

ஆகவே, இறைவன் நமக்குச் செய்த உபகாரங்களுக்கு மாறாக நாம் ஏதும் செய்ய முடியா விட்டாலும், நன்றியறிவுடன் அவனை நினைக்க வேண்டும்; வழிபட வேண்டும். இல்லையானால் நன்றி கொன்ற பாவம் உண்டாகும். அந்தப் பாவம் மிகவும் கொடுமையானது. அதனால் விளையும் துன்பம் மிகப் பெரிது. செய்ந்நன்றி கொன்ற பாவம் எல்லாவற்றிலும் பெரிது என்பதை வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

ஆகையால் நமக்குப் பல வகையில் நலம் செய்த ஆண்டவனை நெஞ்சார நினைக்க வேண்டும்; உருக வேண்டும். அப்படி, நினைக்க நினைக்க அவன் நமக்கு அருகில் வருவான்; நாம் அவனை நெருங்கிக் கொண்டே இருக்கலாம். அதனால் நம்மைத் தீவினைகள் அணுகா, அவ்வாறு செய்யாவிட்டால் அதுவே தீவினையாம். தீவினையினால் ஒருகாலும் நல்லது வராது; வல்வினைகள் யாருக்கும் நலம் உண்டு பண்ணுவதில்லை; ஆக்கம் அல்லது ஆமாற்றுக்கும் அவற்றுக்கும் நெடுந்துாரம்.

இந்தக் கருத்தைச் சொல்ல வருகிறார் காரைக்கால் அம்மையார். திரிபுராதிகள் அசுரர்களானது எப்படி? இறைவனைத் தலைவனென்று அறிந்து, அவனுக்கு நாம் அடிமைகள், ஆட்கள் என்று உணர்ந்து, அவனை ஏத்தவில்லை. தாமே தலைவர்கள் என்று எண்ணிக் கொண்டு திரிந்தார்கள். அதனால் அசுரர்களானர்கள். அவர்களுடைய நகரங்கள் மூன்றும் அவர்களுடைய அழிவு வேலைக்குத் துணையாக இருந்தன. அந்த நகரங்களை இறைவன் ஒரு கணையால் அழித்தான். அவனை நாம் நினைத்து வழிபடவேண்டும்.

அந்தரத்தே

நாம் ஆள் என்று ஏத்தார் நகர்மூன்றும்—வேமாறு
ஒருகணையால் செற்றானை உள்ளத்தால் உள்ளி.