பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233

அவனை நாம் அணுக வேண்டும். அவன் நுட்பமான பொருள். மனத்தால் நினைத்து நினைத்து அவனை அணுக வேண்டும். பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருந்தாலும் மனத்தால் விலகியிருக்கும் பல பேரை நாம் பார்க்கிறோம். தன் காதலன் நெடுந்துாரத்தில் இருந்தாலும் அவனை நினைத்து நெருக்கமாக இருப்பாள் காதலி. இந்த உணர்ச்சியே! உறவுக்கு வலிமை. அதனால்தான்,

"புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்."

என்று வள்ளுவர் சொன்னார். இறைவனை உள்ளத்தால் உள்ளி அருகு அணைய வேண்டும். அப்போது அவன் அருளால் தீவினைகள் நம்மைச் சாரா. இல்லையானால், அவை நம்மை வந்து துன்புறுத்தும். அவற்றால் நலம் உண்டாகாது. 'எங்கே பொல்லாதவர்கள் இருக்கிறார்கள், இறைவனை மறந்து நன்றி கொன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று வல்வினைகள் காத்துக் கொண்டே இருக்கும்; அவர்களைக் கண்டால் வேட்டைநாய் பாய்வதுபோல் பாய்ந்து குலைத்துவிடும்.

அருகணையாதரை....வல்வினைகள் அடும்.

என்கிறார் அம்மையார். பாட்டு முழுவதும் பார்க்கலாம்.

ஆமாறு அறியாலே வல்வினைகள்: அந்தரத்தே
நாம்ஆள் என்று ஏத்தார் நகர்மூன்றும்—வேமாறு
ஒருகணையால் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகுஅணையா தாரை ஆடும்

.

[நன்மைகள் உண்டாகும் வழியைத் தீவினைகள் அறியா; நாம் இறைவனுக்கு அடிமைகள் என்பதை உணர்ந்து அவனைத் துதித்து வணங்காத மூன்று அசுரர்களுக்குரியனவாகிய, வானத்தில் பறந்த மூன்று நகரங்கள் வெந்து எரியும்