பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



35. இருள் இருக்கும் இடம்



தாய்க்குக் குழந்தையைக் கண்ணாரக் கண்டு கண்டு மகிழ்வதில் ஒரு திருப்தி. தன் மைந்தனின் ஒவ்வோர் அங்கத்தையும் கண்டு கண்டு மனம் குளிர்வாள். அவளுக்கு வாக்கு வன்மை இருந்தால் பிற பெண்களோடு தன் குழந்தையின் அழகையும் இயல்பையும் வருணித்து வருணித்துப் பேசுவாள். இது தாய்மையின் இயல்பு.

காரைக்கால் அம்மையார் இறைவனிடம் ஈடுபட்டு அன்பு செய்வதில் பல பல வகையான நிலையிலிருந்து மகிழ்கிறவர். தன் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு வரப்போகிறதே என்று அஞ்சும் தாயைப் போலச் சில சமயம் பேசுவார். “இப்படியெல்லாம் செய்யக்கூடாது அப்பா” என்று அறிவுரை சொல்வது போலச் சொல்வார். இவை தாய்நிலையிலிருந்து பேசுபவை.

“எனக்கு இரங்கமாட்டாயா?” என்று கெஞ்சுவார். "உன்னுடைய அருளை உலகத்தார் அறியவில்லையே!” என்று அங்கலாய்ப்பார். "உன்னுடைய பெருமைக்கு ஈடு உண்டா?” என்று பெருமைப்படுவார். "நீ என் துன்பத்தைப் போக்கா விட்டாலும் நான் உன்னை மறக்கமாட்டேன்" என்று கூறுவார். இவ்வாறு கூறும் இடங்களில் எல்லாம் அவருடைய பக்தி பரவசம் மீதூர்ந்து நிற்கும்.

இப்போது தாய் தன் குழந்தையின் எழிலை அநுபவிக்கும் பாங்கில் அவர் பேசுகிறார். அம்மையாருக்கு இறைவனுடைய நீலகண்டத்தில் ஈடுபாடு அதிகம். வெவ்வேறு வகையில் அதன் பெருமையை எடுத்துரைப்பார். அதனால் விளைந்த