பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237

சுற்றிச் சூழ உள்ள இருள் எண்ணிப் பார்க்கிறதாம். "இப்பொழுதே இதன் ஒளியால் நாம் மெலிந்து வருகிறோம். இனிச் சில காலம் போனால் இது வளர்ந்து தன் ஒளியினால் நம்மை அடியோடு அழித்துவிடும் என்று அஞ்சுகிறது. என்ன செய்வது? எங்கே பாதுகாப்புத் தேடுகிறது?

நஞ்சுடைய நாகத்துக்கும் புகலிடம் தந்து அதை அணிகலனாகப் பூண்டிருக்கிறான் சிவபெருமான் என்பதை அது பார்க்கிறது. படமெடுக்கும் பாம்பு என்றால் படையும் நடுங்கும். அதை இறைவன் அணிகலனாக ஏற்றிருக்கிறான். 'அவன் அணிந்த வெண்மதியினால் நமக்குத் தீங்கு வருவதற்கு முன்னம் அவனையே புகலடைவோம்’ என்று அந்த இருள் எண்ணியதாம். இந்த இடந்தான் நமக்கு ஏற்றது' என்று அப் பெருமான் கோலமிடற்றையே அடைந்து செறிவுடையதாகி, அங்கே இடம் கொண்டுவிட்டதாம். அவ்வாறு இருள் வந்து தங்கியதைப் போல இருக்கிறதாம் ஐயனுடைய மணிமிடற்றின் உள்ள மறு. இப்படி ஒரு கற்பனை செய்து மகிழ்கிறார் காரைக்கால் அம்மையார்.

“அடும்கண்டாய் வெண்மதிஎன்று
    அஞ்சிஇருள் போந்து
இடம்கொண்டு இருக்கின்றது
    ஒக்கும்;-படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய்
    அரவுஅசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு

.

[படத்தைக் கொண்டனவும், அழகிய கழுத்தையுடையனவும், ஆழமான வாயை உடையனவுமாகிய நாகப்பாம்புகளை அணிகலனாகக் கட்டியவனுடைய அழகையுடைய நீலமணி போன்ற கழுத்தில் உள்ள நஞ்சின் கறுப்பான அடையாளமானது, 'இந்த வெண்மதி நம்மை அழித்துவிடும்' என்று