பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36. வளராத மதி



இறைவனுடைய திருமுடிவில் உள்ள பிறை வளர்வதும் இல்லை; தேய்வதும் இல்லை. தட்சனுடைய சாபத்தால் தேய்வுற்ற மதியை இறைவன் தன் திருமுடியில் அணிந்து காப்பாற்றினான். இறைவனைச் சார்ந்த யாவரும் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையில் இருப்பார்கள் என்ற உண்மையை மதியின் நிலை தெளிவிக்கிறது.

சந்திரன் பிறையாக, தேய்ந்த மதியாக, இறைவன் திருமுடியில் இருப்பதற்குக் காரைக்காலம்மையார் ஒரு காரணம் கற்பிக்கிறார். குழந்தையோடு நெருங்கி வேடிக்கையாகப் பேசும் தாயைப்போல இருப்பவர் அம்மையார். இறைவனே, "அம்மையே!” என்று அழைத்த அம்மையார் அவர். ஆகவே. தம்முடைய கற்பனையான எண்ணங்களையெல்லாம் இறை வனை பார்த்தே சொல்கிறார்.

சுவாமி, உம்முடைய திருமுடியின் மேல் உள்ள மதி தேய்ந்து வருந்துகிறது; அதைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. நீர் அந்த முடியின்மேல் பாம்பை அணிந்திருக்கிறீர். எல்லோரும் அஞ்சும் பாம்பை நீர் அணிகலனாகக் கொண்டிருக்கிறீர். தேவர்களெல்லாம் அஞ்சி நடுங்கிய ஆலகால விஷத்தையே கழுத்திலே மணிபோல அணிந்தவராயிற்றே நீர்! இந்தப் பாம்பைக் கண்டு அஞ்சாததில் என்ன வியப்பு இருக்கிறது. இப்படியெல்லாம் எண்ணி இறைவனை விளிக்கிறார்.

மறுவுடைய கண்டத்தீர்!

'நாகத்தைக் கண்டு மக்கள் யாவரும் நடுங்குவது கிடக்கட்டும். சந்திரனுக்கும் பாம்புக்கும் பகை. கிரகண காலங்