பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37. திருக்கோல உண்மை


நாம் உலகில் சில காட்சிகளைக் காண்கிறோம். முதலில் தீயனவாகத் தோன்றினாலும் ஆராய்ந்து பார்த்தால் அவை நல்லனவாக இருக்கும். மருத்துவர், அறுவை மருத்துவம் செய்யும்போது பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அறியாத குழந்தை மருத்துவர் நோயாளியைத் துன்புறுத்துகிறார் என்று எண்ணும். ஆனல் மருத்துவர் செயல் நன்மையையே பயப்பது. சிலர் பார்வைக்கு நல்லவர்களாக இருப்பார்கள்; ஆனால் பண்பில் கொடியவர்களாக இருப்பார்கள். சிலர் பார்ப்பதற்கு முரடர்களைப்போலத் தோன்றுவார்கள்; ஆனால் அவர்கள் நல்ல பண்புடையவர்களாக இருப்பார்கள். ஆராய்ந்து அவர்கள் இயல்பைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்.
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்ற குறளால் இந்தக் கருத்து வெளியாகும்.

உலகியல் காட்சிகளே இப்படியானால் முழுக்க முழுக்கக் குறியீடுகளாக விளங்கும் தெய்வங்களின் தோற்றமும் செயல்களும் நுட்பமாக ஆராய்ந்தாலன்றி உண்மை உணர முடியாதவையாக இருக்கும்.

இந்த நாட்டில் சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் அமைப்புக்களிலும் உள்ளுறையாகத் தத்துவம் புதைத்திருக்கும். கோவிலானாலும் மூர்த்தியானாலும், திருவிழாவானாலும், குடமுழுக்கானாலும் எல்லாவற்றுக்கும் உட்பொருள் உண்டு. அந்த உட்பொருளை உணர்ந்தால் நம்முடைய சமயக் கருத்துகளின் நேர்மை புலப்படும்.