பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

நங்காய்இ தென்ன தவம்?
நரம்போடு எலும்புஅணிந்து
கங்காளம் தோள்மேலே
காதலித்தான் காணேடி!
கங்காளம் ஆமாகேள்:
காலாந் தரத்துஇருவர்
தம்காலம் செய்யத்
தரித்தனன்காண் சாழலோ'

என்ற திருவாசகப் பாடல் இதனை உணர்த்துகிறது.

ஒரு குழந்தை இறந்தபிறகு அதனிடத்தில் இருந்த அன்பினால் பெற்றோர், அது வைத்திருந்த பண்டங்களைப் பாதுகாத்து வைப்பது போல, இறைவனும் தேவர்களின் எலும்புகளை அன்பினால் அணியாக அணிந்து கொண்டான். அவனுடைய அழிவின்மையைபும், எவ்வளவு சிறந்த பதவியில் இருந்தாலும் உரிய காலம் வந்தால் மற்றவர்கள் மறைவதையும், அந்த என்புகள் காட்டுகின்றன.

ஆகவே அவற்றைக் கண்டவர்கள், 'நாமும் இப்படியே அழிந்து போவோம்' என்று உணர்ந்து கொள்ள வேண்டும்: அப்பால், நாம் அழியாத இன்பத்தைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தை மேற்கொள்ள வேண்டும். அழியாதவனைச் சார்ந்தால் அழியாத இன்பம் பெறலாம் என்ற உணர்வு வர வேண்டும். யார் அழிந்தாலும் எது அழிந்தாலும் அழியாதவன் இறைவன் ஒருவனே என்று தெளிய வேண்டும். அப்பால் அவனை நன்கு மதித்து வழிபட வேண்டும்; புகழ வேண்டும்.

இவ்வளவு எண்ணங்களையும், முயற்சிகளையும் உண்டாக்குவதற்குத் துணையாக நிற்பது இறைவன் திருக்கோலம்.