பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247

நம்முடைய உடல் முதலியன நிலையாதவை என்பதைப் பல சமயங்களில் மறந்து போகிறோம். யாரேனும் இறந்து போனால் அப்போதைக்கு அது நினைவுக்கு வருகிறது. அடுத்த கணமே மறந்து போகிறது. பிணத்தைக் கண்டால் அச்சம் உண்டாகிறது. பிறகு அந்த அச்சம் போய் விடுகிறது. சுடுகாடு நம்முடைய நிலையாமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை எப்போதுமா பார்த்துக் கொண்டிருக்கிறோம்? இத்தனையும் நம் உணர்வில் படவேண்டிய ஒரு பகுதியையே காட்டுகின்றன; அதாவது நம் வாழ்வு நிலையாதது என்பதை மட்டும் நினைக்கச் செய்கின்றன.

நமக்கு நோய் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது அவசியம். ஆனால் அதனோடு நின்று விட்டால் போதுமா? நோயை நீக்கும் மருத்துவனை நாடிச் செல்ல வேண்டும். நோயை அறிந்து நோய்க்கு மருந்தையும் தெரிந்து செயற்பட வேண்டும். அப்போதுதான் நோய் நீங்கிச் சுகம் பெறலாம்.

அவ்வாறே, நாம் நிலையாத வாழ்வை உடையோம் என்பதை உணர்ந்து கொண்டு, நிலைத்த வாழ்வைப் பெற என்றும் நிலையான ஒருவனை அடைய வேண்டும். இத்தகைய எண்ணத்தை இறைவன் எலும்பணிந்த திருக்கோலம் உண்டாக்குகிறது. அந்த எண்ணத்தை நாம் கொள்ள வேண்டுமென்றே அவன் எலும்பை அணிந்திருக்கிறான். இங்கே உணவு கிடைக்கும் என்று உணவுச் சாலையில் விளம்பரப் பலகை இருப்பது போல, இங்கே நிலையாத வாழ்வைப் போக்கி நிலைத்த இன்பத்தைப் பெறலாம் என்பதைக் குறிக்க இந்தத் திருக்கோலம் பூண்டிருக்கிறான். அதை அவமதிக்கலாமா? அது அறியாமை அல்லவா? அவமதிக்காமல் மதித்து உண்மையை உணர்ந்து அவனை வழிபட்டால், நாம் இந்த நிலையாத வாழ்க்கையை நீத்து என்றும் அழியாத இன்பநிலையைப் பெறலாம்.

இதைக் காரைக்காலம்மையார் சொல்ல வருகிறார்.