பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

இறைவனுடைய பராக்கிரமத்தை முதலில் சொல்கிறார். அவன் உலகினரைத் துன்புறுத்திய திரிபுராதிகளைத் தண்டித்தான். அவர்கள் ஆட்சி புரிந்த மூன்று பறக்கும் கோட்டைகளாகிய திரிபுரங்களை அழித்து, அவர்களை ஆட்கொண்டான். தக்கனுடைய சாபத்தால் தேய்ந்த மதியைத் தன் வளரும் சடையில் வைத்துப் பாதுகாத்தான்.


மதியா அடல் அவுணர் மாமதில்மூன்று அட்ட
மதிஆர் வளர்சடையி னானை.

அத்தகைய பெருமான் திருமேனியிலே எலும்புச்சட்டகம் அணிந்ததைக் கண்டு அறியாமையால் இகழக்கூடாது; மதியினால் அதன் உண்மையை உணர்ந்து போற்றி வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டுத் துதித்தால் அவர்கள் மறுபடியும் இந்த உலகில் எலும்புகளையுடைய தேகத்துடன் பிறக்கமாட்டார்கள்.

'மதியாலே என்பாக்கை யால்இகழாது ஏத்துவரேல்
இவ்வுலகில் என்பாக்கையாய்ப்பிறவார் ஈண்டு.

அவன் மும்மலங்களை அழிப்பவன் என்பதை அவன் திரிபுரசங்காரம் செய்த செயல் காட்டுகிறது. தன்னைச் சரண் அடைந்தாரைக் காப்பவன் என்பதை அவன்மதியை அணிந்த செயல் காட்டுகிறது. அத்தகையவன் செயல்களை எண்ணினால் அவன் திருக்கோலத்தின் உண்மை புலப்படும். மதியின்மையால் மேலெழுந்தவாரியாகக் கண்டு இகழ்வார் உண்டு. அப்படிச் செய்தால் நன்மை பெற முடியாது. மதியினால் உண்மையை உணர்ந்து ஏத்தவேண்டும். இந்த உலகில் வாழும்போதே ஏத்திப் பரவவேண்டும். அப்படிச் செய்தால் மறுபடியும் இங்கே பிறக்கும் அவலநிலை உண்டாகாது. எலும்பால் கட்டிய உடம்பாகப் பிறக்க மாட்டார்கள்.