பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249


மதியா அடல்அவுணர் மாமதில்மூன்று அட்ட
மதியார் வளர்சடையி னானை-மதியாலே
என்புஆக்கை யால்இகழாது ஏத்துவரேல் இவ்வுலகில்,
என்புஆக்கையாய்ப்பிறவார் ஈண்டு.

[தன்னை மதிக்காத, வலிமையுடைய அசுரர்களின் பெரிய மதில்கள் மூன்றை அழித்த, சந்திரன் தங்கும் வளரும் சடையை உடைய சிவபெருமானை, அவனணிந்த என்புச் சட்டத்தை (அறியாமையால்) இகழாமல், அறிவுத்திறத்தால் உண்மையைத் தெரிந்து புகழ்ந்து இவ்வுலகில் வழிபடுவார்களானால், அவர்கள் என்போடு கூடிய உடம்புடன் இங்கே மீண்டும் பிறக்க மாட்டார்கள்.

மாமதில் மூன்று-இரும்பு, வெள்ளி, பொன் ஆகிய உலோகங்களால் அமைந்த மதில்களையுடைய திரிபுரங்கள். 'என்பாக்கையால் இகழாது, மதியால் ஏத்துவரேல்' என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். 'மதியின்மையால் இகழாது' என்று வருவித்துப் பொருள்கொள்க. இவ்வுலகில் ஏத்துவரேல்-ஏத்துதலைச் சொன்னாலும் உபலட்சணத்தால், மனமொழி மெய்களால் வழிபடுவதையும் கொள்ள வேண்டும். என்பு ஆக்கையாகிய தோற்றம் உடையவராய், ஈண்டு இவ்வுலகத்தில்]

இறைவனுடைய திருக்கோலத்தின் உள்ளுறையை அறிந்து வழிபட்டால் பிறவி நீங்கி நித்திய சுகத்தை அடையலாம் என்பது கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியில் 37-ஆம் பாட்டு.