பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39. சிறுத்த மதி


மனித மனம் சும்மா இராது. அது அலைந்து திரிந்து கொண்டே இருக்கும். சும்மா இருக்கும்போது பகற்கனவு காணும். தான் கண்ட காட்சிகளையும், பெற்ற அனுபவங்களையும் மீண்டும் சிந்தித்துப் பார்க்கும். நிறைவேறாத ஆசைகளைக் கற்பனையால் நிறைவேற்றிக் கொள்ளும். அதன் விளைவாக, உறங்கும்போது பலவகையான கனவுகள் உண்டாகும்.

இறைவனிடம் ஈடுபட்டவர்களுக்கு எப்போதும் அவனுடைய சிந்தனையே உள்ளத்தில் இருக்கும். மனம், வாக்கு, காயம் என்ற மூன்று கரணங்களும் இறைவனைச் சுற்றியே படரும். அவர்களுடைய சிந்தனைகளும், கற்பனைகளும் இறைவனைச் சுற்றிச் சூழவே விரிந்து நிற்கும்.

உலகியற் புலவர்களுக்கு, கற்பனை உலகியற் பொருள்களிலே படரும். இறைவனுடைய பக்தியில் ஆழ்ந்த புலவர்கள் தம்முடைய கற்பனைக்குப் பொருளாக இறைவனையும் அவனோடு சம்பந்தப்பட்டவற்றையும் வைத்துப் பாடுவார்கள்.

அவர்கள் சிந்தனை அவன் திருவருளில் ஆழும்; இறைவனைப் பற்றிய தத்துவங்களை ஆராயும் அவர்கள் கற்பனை அவனுடைய திருமேனி அழகிலே ஈடுபடும். அவன் அங்கங்களுக்கும், தோற்றத்துக்கு முரிய உவமைகளை நாடி விரிக்கும்; உருவகமாக்கும். அவனுடைய திருவிளையாடல்களையும் பராக்கிரமங்களையும் விரிவுபடுத்தும்; கதையாக்கும்; காவியமாக்கும்; அலங்காரங்களையெல்லாம் செய்து அழகுபடுத்தும்.

செல்வம் மிக்க தாய், தன் குழந்தைக்கு எப்படியெல்லாம் ஆடை, அணி, மலர்களைப் புனைந்து அழகு செய்து பார்க்க

நா.—17