பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269

போல ஆகிவிடுவோம். அவர்கள் சேர்ந்துள்ள சூழலில் நம்மை அறியாமலே அவர்களுடைய பழக்க வழக்கங்களை நாமும் மேற்கொள்ளத் தொடங்குவோம்.

விடியற்காலையில் எழுந்து புழக்கம் இல்லாதவன் ஒருவன். அவன் நல்லோர் குழுவில் சேர்கிறான். அவர்கள் விடியற்காலையில் நான்கு மணிக்கே எழுந்து நீராடி இறைவனை வழிபடத் தொடங்குகிறவர்கள். அவன் உறங்கினாலும் அவனிடம் உள்ள அன்பினால் அவர்கள் அவனை எழுப்புவதில்லை. என்றாலும் அவன் விழித்துக் கொள்கிறான். பழைய பழக்கத்தினால் படுக்கையில் கிடந்தாலும், எல்லோரும் எழுந்து விட்டபிறகு தான் படுக்கையில் இருப்பது முறையன்று என்று நினைக்கிறான். அவன் மனச்சாட்சி உறுத்துகிறது. மெல்ல எழுந்து உட்காருகிறான்; மறுபடியும் படுத்துக் கொள்கிறான். இரண்டு நாள் இப்படிச் செய்த பிறகு மூன்றாவது நாள் எழுந்தவன் படுப்பதில்லை. எழுந்து நீராடப் போகிறான். அந்த நேரத்தில் அவன் நீராடிப் பழக்கம் இல்லை. என்றாலும் அவன் நீராடுகிறான். நாளடைவில் அவன் மற்றவர்களைப் போலவே செய்யத் தலைப்பட்டு அவர்களில் ஒருவன் ஆகிவிடுகிறான். அவனிடம் இருந்த மாறான பழக்கங்கள் மாறி நல்ல பழக்கங்கள் வந்து விடுகின்றன.

சார்பினுடைய பலத்தில் வெறும் ஜடப் பொருள்களே தம்முடைய போக்கிலிருந்து மாறுகின்றன. ரெயில் வண்டி வேகமாக ஓடும்போது, கீழே கிடக்கும் சருகிலைகள் அதனோடு, சிறிது தூரம் பறந்து ஓடுகின்றன. தண்ணீரில் ஆழும் கல் மிதக்கும் கட்டையின் மேல் இருந்தால் ஆழ்வதில்லை. ஜடப் பொருள்களுக்கே சார்ந்த சார்பினால் இயல்பு மாறுமென்றால் அறிவுள்ள மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதனால்தான் தாயுமானவர், "இறைவனே, நான் பேரின்பப் பெருவாழ்வைத் தேடிப் போய் அடையும் ஆற்றல் இல்லாதவன். என்னை அன்பர் கூட்டத்தில் சேர்ந்து அவர்களுக்குத்