பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270


தொண்டு செய்கின்ற நிலையில் என்னை வைத்தருள். அப்போது அந்தப் பேரின்பப் பெருவாழ்வு என்னைத் தேடிக் கொண்டு வரும்” என்று சொல்கிறார்.

“அன்பர் பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
 இன்பநிலைதானேவந் தெய்தும் பராபரமே”

என்பது அவரது திருவாக்கு.

சாது சங்கத்தில் சேர்ந்திருப்பது மட்டும் போதாது. அல்லாதவர்களுடைய சங்கத்தினின்றும் விலகி நிற்க வேண்டும். பயிருக்கு உரம் போடுவது மட்டும் போதாது; களையும் எடுக்க வேண்டும். நல்லவர்களோடும் அல்லாதவர்களோடும் அடுத்தடுத்துப் பழகினால் ஒரு பயனும் உண்டாகாது. நல்லோர் இணக்கத்தினால் உண்டாகும் நற்பயனை அல்லாதவர் இணக்கம் அழித்துவிடும். தீய பயனை உண்டாக்கும். பயிருக்கு வேலியிட்டு மாடு முதலியவை வராமல் பாதுகாப்பது போல நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நல்லோர் இணக்கமும் அல்லாதவரோடு சேராமையும் நன்னெறியில் நாம் செல்வதற்கு இன்றியமையாதவை. சாது சங்கமும் சாதுக்களல்லாதரோடு இணங்காமையும் நம்மிடம் நற்பண்புகள் வளரவும் தீய பண்புகள் நெருங்காமல் இருக்கவும் வகை செய்யும்.

இந்த இரண்டையும் எண்ணுகிறார் காரைக்கால் அம்மையார். நல்லோரியக்கமும் அல்லாதவரோடு கூடாமையும் வேண்டும் என்பதை தம் நெஞ்சுக்கு அறிவுறுத்துவாரைப் போலச் சொல்கிறார்.

ஏ, அறியாமை நிறைந்த நெஞ்சமே! நீ இறைவனை மீட்டும் மீட்டும் எண்ணி அவன் திருநாமத்தைச் சொல்ல வேண்டும் என்று தொடங்குகிறார். மனத்தை உருவுடையதாகக் கருதி அதற்குக் கை கால் வாய் முதலியன இருப்பது