பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

பகைவர் முற்றுகையிடாமல் அந்தக் கோட்டையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விளக்குத் திரியிட்டு எண்ணெயிட்டு ஏற்றியாயிற்று. அதைப் பெருங்காற்று வீசி அணைக்காதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பாதுகாப்பை இனிச் சொல்ல வருகிறார்.

இறைவனை எண்ணாதவர்களோடு சேர்வதை விலக்க வேண்டும். அவர்களோடு சேர்வதால் மறுபடியும் மனம் அவர்கள் போகும் வழியைச் சார நினைக்கும். குடத்தில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது ஓட்டையுடையதாக இருந்தால் அதன் வழியே போய்விடும்; குடத்தை நிரப்ப இயலாது. ஆகவே, அஸாதுக்களுடைய சங்கத்தைச் சேராமல் இருக்க வேண்டும். இறைவனை எண்ணாதவர்களுடைய கூட்டத்தினின்றும் விலகி நிற்க வேண்டும். நெஞ்சுக்கு இந்த உபதேசத்தை அம்மையார் சொல்கிறார்.

உள்ளதார் கூட்டம் ஒருவு

[உள்ளாதார் — எண்ணாதவர்கள்; யாரை எண்ணாதவர்கள்? இறைவனை எண்ணாதவர்கள். இங்கே இறைவனைப் பற்றிக் சொல்கிறார்.]

சிவபெருமான் தனக்கெனச் சிறப்பான சில அடையாளங்களை உடையவன். சந்திரன் தக்கனுடைய சாபத்தால் தேய்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருள் புரிந்து பிறையைத் தன் திருமுடியில் தரித்துத் தேயாமலும் வளராமலும் இருக்கச் செய்தான். இறைவனுடைய திருமுடியில் அந்தப் பிறை சிறிய கண்ணி போல விளங்குகிறது. வேறு யாரும் சந்திரனைக் காப்பாற்றவில்லை. அவன் இன்னலை எண்ணி யாரும் அவனை ஏற்கவில்லை. இறைவனே அவனை ஏற்றுக் கொண்டு குறுங்கண்ணி போலத் திருமுடி மேல் வைத்துக் கொண்டான்.