பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42. நீ எங்கே?


சிவபெருமானுடைய திருக்கோலங்கள் பல. அவற்றில் 25 முக்கியமானவை. அருவமாக இருக்கும் இறைவன், உயிர்க் கூட்டங்களில் தவம் செய்து பக்குவப்பட்டவர்களுக்கு உருவமாக எழுந்தருளிக் காட்சியளித்தான். வெவ்வேறு அன்பர்களுக்கு வெவ்வேறு கோலம் காட்டி அருள் புரிந்தான். முதலில் அருவுருவத் திருமேனியாக, ஜோதிலிங்கமாகத் தோன்றினான். பிரமனும், திருமாலும் முடியையும் அடியையும் தேட இயலாமல் திகைக்க வைத்த கோலம் அது என்று புராணம் கூறும். .

பிரமன் கலைமகள் நாயகன்; படைப்பாற்றல் உடையவன். அவன் கற்றவர்களின் பிரதிநிதி. திருமால் திருமகளின் நாயகன், பாதுகாக்கும் ஆற்றலுடைய ரக்ஷண கர்த்தா. அவர் செல்வர்க்ளின் பிரதிநிதி. கல்வியினாலும், செல்வத்தினாலும் மெய்ப்பொருளைக் காண இயலாது என்ற உண்மையையே அடிமுடி தேடிய கதை சொல்கிறது. பிரமன் இழிந்தவன், திருமால் குறைந்தவர் என்பதற்காக இந்தக் கதை எழவில்லை. யாராக இருந்தாலும் கல்வியாற்றலாலும் செல்வச் சிறப்பாலும் உண்மைப்பொருளைத் தெரிந்துகொள்ள முடியாது என்பதை, அவர்களும் சிவபெருமானும் சேர்ந்து ஒரு நாடகம் ஆடிக்காட்டினார்கள் என்று கொண்டால் சமரச உணர்வுக்கு ஏற்ற விளக்கமாக இருக்கும்.

சைவ புராணங்களில், இப்படி மற்றத் தேவர்களெல்லாம் அடிபணியச் சிவபெருமான் எல்லாருக்கும் மேலான பரம் பொருளாய் விளங்குகிறான் என்ற கருத்தைத் தெரிவிக்கும் கதைகள் வரும். விஷ்ணு புராணங்களில் சிவபெருமான்