பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

திருமாலினுடைய அருளுக்காக ஏங்குவதும், அவர் அருளைப் பெற்று ஓங்குவதுமாகிய கதைகள் வரும். இருவகைப் புராணங்களையும் இயற்றினவர் ஒரே ஆசிரியர். வேதத்தை வகுத்தமைத்த வியாச முனிவரே பதினெண் புராணங்களையும் இயற்றியிருக்கிறார். அவரவர் மனப்போக்கிற்கு ஏற்ப, எந்த மூர்த்தியிடத்தில், மனம் பதிகிறதோ அந்த மூர்த்தியே எல்லா மூர்த்திகளையும் விட உயர்ந்தவர் என்ற எண்ணத்தோடு உபாசிப்பது பக்தர்கள் இயல்பு. ஆனால் மற்ற மூர்த்திகளை வழிபடுகிறவர்களைத் தாழ்வாக எண்ணக்கூடாது. இராமபிரானுடைய மனைவி சீதை, இராவணனுடைய மனைவி மண்டோதரி. இராமனுக்கும் இராவணனுக்கும் உள்ள இயல்புகள் மாறுபட்டன. ஆனால் சீதையும் மண்டோதரியும் சிறந்த கற்பரசிகளாகப் போற்றப்படுகிறவர்கள். சிவனடியார்களும் திருமாலடியார்களும் வேறுவேறு மூர்த்திகளை வழிபடுகிறவர்களானாலும், அவர்கள் உண்மையான பக்தர்களானால் அவர்கள் போற்றற்குரியவர்களே.

சிவ விஷ்ணு பேதத்தை மாற்றும் வகையில் பெரியோர்கள் பாடியுள்ள பாடல்களும், கதைகளும் பல உண்டு. சிவபெருமானுடைய வடிவங்களுள் கேசவார்த்தர் என்பது ஒன்று. சங்கரநாராயணர் என்றும் அந்த மூர்த்தியைச் சொல்வர். அந்தக் கோலத்தில் ஒரு பாதி மாலும், ஒரு பாதி சிவபெருமானும் இணைந்த தோற்றம் இருக்கும். அது சைவ வைஷ்ணவ சமரசத்தைக் காட்டும் கோலம். சங்கர நயினர் கோயிலில் சங்கரநாராயணமூர்த்தியின் சந்நிதி இருக்கிறது. மற்ற ஆலயங்களில் அங்கங்கே சிற்ப வடிவங்களில் அந்த மூர்த்தியைக் காணலாம். ஹரிஹர பேதம் இல்லாமல் வழிபடுவதற்கு ஏற்ற கோலம் அது.

இப்படியே சக்திக்கும் சிவத்துக்கும் வேறுபாடு இல்லை என்று காட்டுவது அர்த்தநாரீசுவரத் திருக்கோலம். மாதிருக்கும் பாதியனாகச் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மூர்த்தம் அது. திருச்செங்கோட்டில் அந்த மூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். வேறு கோயில்களிலும் அந்த மூர்த்தியை