பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43. என்ன காரணம்?


தன்னுடைய பிள்ளையுடன் வேடிக்கையாகப் பேசும் உரிமை தாய்க்கு உண்டு. தகப்பனாரை விடத் தாமே நெருங்கிப் பேசும் உரிமையுடையவர். காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் அத்தகைய உறவோடு அன்பு செய்தவர். சிவபெருமானைத் தெய்வமாகவும் தகப்பனாகவும் பாராட்டிப் பாடும் பாடல்கள் பல. அவனிடம் நெருங்கி உரிமையோடு தாய் பேசுவது போலப் பேசும் இடங்களும் சில. “நீ இது செய்யாதே; இப்படிச் செய்தால் ஆபத்து” என்று சொல்வார். தாய் தன் மகனைப் பார்த்து "அப்பா. நீ அங்கெல்லாம் போகாதே" என்று சொல்வது போன்றது இது. "இதனால்தான் இப்படி இருக்கிறாயோ?" என்று கேட்பதுண்டு.

அவ்வாறு நெருங்கிப் பேசும் நிலையில் வருகிறது ஒரு பாட்டு.

சிவபெருமான் திருமுடியில் உள்ள பிறையைப் பார்க்கிறார் அம்மையார். அதை உற்றுக் கவனிக்கிறார். பூர்ணச் சந்திரனைத் திருமுடியில் வைத்திருக்கக் கூடாதோ? ஒருகால் பூர்ண சந்திரனை வைத்துக் கொண்டு, பிறகு அதற்கு இந்த நிலை வந்ததோ? வேறு என்ன காரணம்? தெரியாதவரைப் போல யோசிக்கிறார். இறைவன் தன் திருமுடிமேல் பிறைச் சந்திரனைச் சூடியிருக்கும் காரணம் அவருக்குத் தெரியாதா?

தட்சனுடைய மாப்பிள்ளை சந்திரன். அவன் இருபத்தேழு நட்சத்திரங்களையும் மனைவியாகக் கொடுத்து திருமணம் செய்வித்தான். சந்திரனுக்கு உடுபதி என்று பெயர்; நட்சத்திரங்களுக்கு நாயகன் என்பது பொருள். சந்திரன் ரோகிணி