பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

281

யிடம் அதிக அன்பு வைத்து மற்றவர்களைப் புறக்கணித்தான். அதை அறிந்த மற்ற இருபத்தாறு நட்சத்திர மகளிரும் தட்சனிடம் முறையிட்டுக் கொண்டனர். தட்சனுக்கும் சந்திரன் மேல் கோபம் வந்து விட்டது. அவன் தன் மாப்பிள்ளை என்பதையும் மறந்து, "நீ தேய்ந்து ஒழிவாயாக" என்று சாபமிட்டான். அவன் தேய்ந்து வந்தான். அவன் சிவபெருமானிடம் வந்து பணிந்து இறைஞ்சினான். அப்பெருமான் அவனைத் தன் திருமுடியின்மேல் பிறையாகவே வைத்துக் கொண்டான். வானத்தில் அவன் தேயவும் மீண்டும் வளரவும் வரம் அருளினான்.

சிவபெருமான் திருமுடியில் வைத்துள்ள பிறை தேய்வது இல்லை; வளர்வதும் இல்லை. இறைவனை அடைந்தவர்கள் குறைவதும் வளர்வதும் இன்றி ஒரே நிலையில் இருப்பார்கள் என்பதை இது காட்டுகிறது.

பிறைவடிவிலே இருக்கும் சந்திரனைக் கண்டு அது பற்றி சொல்ல வருகிறார் காரைக்கால் அம்மையார். “இது இளைய குழந்தை போலப் பிறையாகவே இருக்கிறதே! இறைவனை சார்ந்த யாவும் வளம் பெற்று வளர்ச்சி அடையுமே! இந்தப் பிறை மாத்திரம் மறுபடியும் வளர்ந்து பெரிதாகி முழுமதி யாகாதோ? என்ன காரணம்?”— இப்படி அவருடைய யோசனை படர்கிறது.

இளங்குழவித் திங்கள் இது.......
வளரமாட்டாதோ?

என்று தமக்குள்ளே வினாவை எழுப்பிக்கொள்கிறார். ‘என்றும் குழவி போல இளமையை உடையதாய் உள்ள இதன் வளம் மறுபடியும் வளர்ச்சி பெறாதோ?’ என்றும் யோசிக்கிறார்.

இறைவன் தன் சடைமுடியில் பாம்பை அணிந்திருக்கிறான். பாம்புக்கும் சந்திரனுக்கும் பகை. அது சந்திரனைக் கடித்து விழுங்கி விடும். சிவபெருமான் முழுமதியாகவே தன்தலையில் அணிந்து கொண்டு, பிறகு அவன் திருமுடியில்