பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44. நம்மால் முடியுமா?


மிகவும் அன்புடையவர்களிடத்தில் உள்ள பழக்கங்களை நாம் நன்கு அறிவோம். அந்தப் பழக்கங்கள் எல்லாம் நமக்குப் பிடித்தவை என்று சொல்லமுடியாது. நம்முடைய அன்புக்கு உரியவர் மிகப்பெரியவராக, மதிப்புக்கு உரியவராக இருந்தால், அவருடைய குணங்களையோ, பழக்க வழக்கங்களையோ நாம் குறை கண்டு பேசுவதில்லை; என்றாலும் ஏதேனும் ஒரு செயல் நம் மனதுக்குப் பொருத்தமாகத் தோன்றாமல் இருக்கும். அந்தச் செயலுக்கு உரிய காரணம் ஏதாவது இருக்கலாம். அது நமக்குத் தெரியாது. ஆயினும் அந்தக் காரியத்தை அந்தப் பெரியவர் செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதை எப்படி அவர் செய்யாமல் தடுப்பது? அவரோ மதிப்புக்குரியவர். "நீங்கள் இதைச் செய்யக்கூடாது” என்று வெளிப்படையாகச் சொல்லித் தடுக்க இயலாது. ஆனாலும் எப்படியாவது நம் கருத்தைத் தெரிவித்துவிட வேண்டும் என்ற எண்ணம் உந்துகிறது. குறிப்பாகச் சொல்லிப் பார்க்கிறோம். அவ்வளவுதான் நம்மால் முடியும். அந்தக் குறிப்பை உணர்ந்துகொண்டு அந்தப் பெரியவர் அந்தச் செயலை நிறுத்தினால் நமக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

அந்தச் செயலை ஏன் தடுக்க வேண்டும்? அவ்வளவு பெரியவரைப் பற்றிச் சிலர் பழி கூறுகிறார்கள். அந்தச் செயலைச் செய்வதையே இழித்துக் கூறுகிறார்கள். அதைக் கேட்கும் போது நமக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த ஒரு செயலால் தானே இந்தப் பெரியவருக்குப் பழி உண்டாகிறது?. இதைச் செய்யாமல் நிறுத்திவிட்டால் பழிகூறுவார் வாய் அடைத்து விடுமே!’ என்று நாம் எண்ணுகிறோம்.