பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

திங்கள் இதுசூடிச் சில்பலிக்கு என்று ஊர்திரியேல்
எங்கள் பெருமானே’ என்று இரந்து—பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே?
தானே அறிவான் தனக்கு.

“இந்தச் சந்திரனைத் தலையிலே அணிந்து கொண்டு சிறிது பிச்சைக்காக ஊர்தோறும் திரியாதே, எம்பெருமானே!” கெஞ்சிக் கேட்டுக் கொண்டு, மிக்க ஒளியை உடைய, தேவர்கள் சிவபெருமான் பிச்சை எடுப்பதை விலக்காமல் இருப்பாரானால், ஒன்றுக்கும் பற்றாத யாம் விலக்கும் வன்மையை உடையேமா? தனக்கு உரியதைத் தானே அறிவான். எம்பெருமான்.

[சூடி-தலையில் அணிந்து கொண்டு, சில் பலி-சிறிய பிச்சை; சில என்பது சிறுமையைக் குறித்தது; சினனரீர் என்பது போல. ஊர் திரியேல்-ஊர்தோறும் திரியாதே' “ஊரூரன் பலிக்குழல்வான்” என்பர். பொங்கு ஒளிய வானோர் - மிக்கொளிவரும் ஒளியையுடைய திருமேனி படைத்த தேவர்கள்; ஒளி, உள்ளொளியாகிய அறிவையும், புறவொளியாகிய தேசையும் குறிக்கும். தேவர்கள் இரண்டும் உடையவர்கள். அவர்கள் அறிவு நிரம்பியவர்களாதலின் புலவர் என்ற பெயரை உடையவர்கள். வல்லமே ஏகாரம்; வினா; வன்மையை உடையேம் அல்லோம் என்ற பொருள்பட நின்றது. தனக்கு உரியதை என்று ஒரு சொல் வருவித்து முடிக்க. 'தானே சொல்லாமலே அறிபவனுக்கு விலக்க வல்லமே என்று கூட்டிப் பொருள் கொள்வதும் பொருந்தும். தனக்கு என்பதை உருபு மயக்கமாகக் கொண்டு, தன்னை விலக்க வல்லமே என்று பொருள் கொள்க.]

காரைக்கால் அம்மையார் இறைவனை நெருங்கிப் பாடியது இது. இது அற்புதத்திருவந்தாதியில் 43-ஆம் பாட்டு.