பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

தலங்களுக்குப் போய் வந்ததைப் பெருமையாக எடுத்துச் சொல்கிறோம். அந்த ஞானியைத் தரிசித்தேன்; இந்தச் சுவாமிகளைத் தரிசித்தேன். அங்கே உள்ள சாதுவைப் பார்த்து நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஆசாரிய சுவாமிகள், செளக்கியமாக இரு என்று சொன்னர்கள்: அந்த மகா பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆயிரம் ஹோட்டல்களின் விலாசத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டால் வயிறு நிரம்புமா? சாப்பிட்டால்தானே பசி போகும்? பெரியவர்களுடைய தரிசனமும் சாதுக்களுடைய சங்கமும் முடிந்த முடிவு அல்ல. அவைகள் எல்லாம் நமக்கு இறைவன் அருளைப் பெறவேண்டும் என்ற பசி உண்டாகக் காரணமாகும். அதற்கு மேல் நாமே முயன்று. சாதனம் செய்தாலன்றி இறைவனுடைய அருளனுபவம் உண்டாகாது. குருநாதர்கள் வழிகாட்டுவார்கள். அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றிச் சாதனத்திலே ஈடுபட்டு மேலே மேலே போகவேண்டும். படிப்படியாக அநுபவத்திலே உயரவேண்டும்.

'பள்ளிக்கூடத்தில் படிப்பவர்கள் படிப்படியாகப் பல வகுப்புகளைத் தாண்டி மேற்படிப்புப் படிப்பது போல, இறைவன் திருவருளைப் பெறும் முயற்சிகளிலும் பல படிகள் உண்டு. அவற்றைத் தாண்டி மேலே போகவேண்டும். இடையிலே நின்று விடக்கூடாது. நாம் இதுவரையில் ஏறிவந்த படிகளைப் பார்த்துத் திருப்தி அடையக் கூடாது. இனிமேல் ஏற வேண்டிய படிகளைப் பார்த்து ஏங்க வேண்டும்; அவற்றைக் கடக்க முயல வேண்டும்.

பக்தர்களும் ஞானிகளும் முடிந்த முடிபாகிய சகஜ சமாதி வரும் வரையில் படியில் ஏறிக்கொண்டே இருப்பார்கள். "இன்னும் பல படிகள் கடக்க வேண்டுமே இறைவா, அதற்கு வேண்டிய பலத்தைத் தா” என்று இறைஞ்சுவார்கள். இத்தனை தூரம் ஏறும்படி அருள் செய்வதற்காக நன்றி.