பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அவரிடம் உள்ள அன்பு எதையும் எதிர்பாராத அன்பு. இறைவன் உயிர்களிடம் எந்தக் கைமாற்றையும் எதிர் பாராமல் கருணை வைக்கிறான், அதை அவ்யாஜ கருணை என்பார்கள். சிறந்த அன்புடையவர்களும் இறைவனால் ஒரு லாபம் உண்டென்று கருதி அன்பு செய்வதில்லை. அவ்யாஜ ப்ரேமை அது. அதையே பிரேம பக்தி என்பார்கள். அவன் பால் அன்பு செய்வதே அவர்களுக்கு இன்பம்.

"கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்"

என்று சேக்கிழார் கூறுவார். முக்தியின்பத்தைக்கூட அவர்கள் வேண்டுவதில்லை.

அத்தகைய சீரிய அன்புடையவர் காரைக்கால் அம்மையார், அவருடைய நெஞ்சத்திலுள்ள அன்பு எதையும் எதிர்பாராத, எதற்கும் அஞ்சாத, என்றும் குறையாத பிரேம பக்தி, அதனால்தான் இப்படி வருகிறது பாட்டு :

"இடர்களையா ரேனும், எமக்குஇரங்கா ரேனும்,
படரும் நெறிபணியா ரேனும்-சுடருருவில்
என்பு அறாக் கோலத்து எரிஆடும் எம்மானார்க்கு
அன்பு அறாது என்நெஞ்சு அவர்க்கு.”

சிவபெருமான் எம்முடைய இடரைக் களையார் என்றாலும், எம்பால் இரங்காமல் இருந்தார் என்றாலும், நாங்கள் செல்ல வேண்டிய வழியைக்கூடக் காட்டாராயினும் சோதி வடிவமுள்ள தம் திருமேனியில் எலும்புமாலை எப்போதும் நீங்காமல் இருக்கும் கோலத்தோடு, நெருப்பில் கூத்தாடும் எம் தலைவருக்கு என் அன்பு என்றும் அறாது; என் நெஞ்சு அவருக்கே உரியது; அவரையே கூட்டியும் பற்றுவது.