பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

ஆண்டவன் அனந்த கல்யாண குணங்களை உடையவன். அவனுடைய சிறப்புக்கள் பக்தர்கள் உள்ளத்தை உருக்குவன. அவனுடைய சீரை நினைப்பதனால் உள்ளம் இனிக்கிறது; பேசுவதனால் வாய் இனிக்கிறது. நினைக்க நினைக்க மனத்துக்கு இனியனவாக உள்ள சீர்கள் அவை.

மனக்கு இனிய சீராளன்

அவனுடைய இனிக்கும் சீர்கள் எத்தனையோ? அவன் கருணைக்கு எத்தனையோ சான்றுகளைக் கூறலாம். பகீரதன் செய்த தவத்துக்குப் பயன் கிடைக்கவில்லை. இறைவன் மனம் இரங்கி, ஆரவாரித்து வந்த கங்கையைத் தன் சடையிலே தாங்கிப் பகீரதனுடைய வேண்டுகோளை நிறைவேற்றினான். அந்தக் கங்கையைத் தலையிலே தாங்கி நிற்கிறான், அகங்காரத்தால் கலக்கம் அடைந்து புனிதம் இழந்த கங்கை இறைவன் திருமுடியில் தேங்கித் தெளிந்து புனிதம் பெற்றது. கங்கைக்கு, இறைவன் மணவாளன் என்று உலகம் பேசுகிறது. உமாதேவிக்குச் சமானமான நிலையைக் கங்கை பெற்றது. உமாதேவியைக்கூட ஒரு பாகத்தில்தான் வைத்தான். கங்கையையோ தலையின்மேல் வைத்திருக்கிறான். அவன் ஈரமுடையவன்; ஈரம் அருளைக் காட்டுவது. கங்கை மணவாளன் என்பது அவன் பேரருளாளன் என்பதைக் காட்டும் அறிகுறி.

கங்கை மணவாளன்

அவன் திருமேனி செம்மையானது. செம்மை என்பது நிறைவுக்கும், நேர்மைக்கும், மங்கலத்துக்கும், உயிரூட்டத்துக்கும், அழகுக்கும் அடையாளமாக உள்ள வண்மை. இறைவன் இவற்றையெல்லாம் உடையவன்.

“சிவனெனும் பெயர் தனக்கே உடைய செம்'
மேனியம்மன்”

என்று அப்பர் பாடுவார்.