பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297

என்னுடைய குறையா? அல்லது உன்னுடைய புறக்கணிப்பா?' என்று கேட்கிறார்.

எனக்கே அருளாவாறு என்கொல்?

இறைவன் அருளை முற்றும் பெற்றிலேன் என்ற ஏக்கத்தால் இப்படிக் கேட்கிறார். இந்த ஏக்கம் இருந்தால் தான் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே இருக்க முடியும்.

தனக்கே அடியனாய்த் தன்அடைந்து வாழும்
எனக்கே அருளாவாறு என்கொல்?—மனக்குஇனிய
சீராளன், கங்கை மணவாளன், செம்மேனிப்
பேராளன், வானோர் பிரான்.

[மனத்துக்கு இனியனவாக உள்ள கல்யாண குணங்களை உடையவனும், கங்கா தேவியின் மணவாளனும், செம்மையான திருமேனியையுடைய பெரியவனும், தேவர்களுக்கெல்லாம் உபகாரியமாக இருக்கின்ற சிவபெருமான், வேறுயாரையும் அணுகாமல் தனக்கே அடிமைப் பட்டேனாய்த் தன்னை அடைந்து வாழும் அடியேனுக்கே அருளாமல் இருக்கும் இயல்பு ஏன்? அதற்கு என்ன காரணம்?

தனக்கே ஏகாரம், பிரிநிலை. அடியன்-அடியேன்; தன்மை ஒருமை; ஆண்பாற் படர்க்கை அன்று. தன்-தன்னை, எனக்கே: ஏகாரம், பிரிநிலை; தேற்றமும் ஆம். அருளா ஆறு-அருளாத வண்ணம். மனக்கு-மனத்துக்கு; சாரியை தொக்கது. சீர்—பண்புகள். பிரான்-உபகாரி]

அற்புதத் திருவந்தாதியில் 44-ஆம் பாடல் இது.