பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



46. எங்கே இருக்கிறான்?


ஆண்டவன் எங்கே இருக்கிறான்? இப்படிக் கேட்பதை விட, 'அவன் எங்கே இல்லை? என்று கேட்பது எளிது. அவன் இல்லாத இடமே இல்லை. அவன் சர்வ வியாபகன்; சர்வாந்தர்யாமி; அதாவது எல்லாவற்றுக்கும் உள்ளும் இருக்கிறான்; எல்லாவற்றினூடும். இருக்கிறான். அவனுக்குத் தமிழில் கடவுள் என்ற பெயர் அமைந்திருக்கிறது; அவன் எல்லாவற்றையும் கடந்து, எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொண்டு, அவற்றுக்கு அப்பாலும் இருக்கிறான். இது அவனுடைய சர்வ வியாபக நிலை. எல்லாம் இல்லாத இடத்தில் தத்துவங்களுக்கெல்லாம் அதீதனக இருக்கிறன். அதே சமயத்தில் அவன் அணுவுக்கு அணுவாய், நுண்ணிய பொருள்களினூடும் மிகநுண்ணிய பொருளாயும் இருக்கிறான்.

"நுண்ணியான், மிகப்பெரியான்”

என்று ஞானசம்பந்தர் பாடுவார். இந்தக் கடவுள் தத்துவத்தை நற்றிணை என்னும் சங்க நூலில் உள்ள கடவுள் வாழ்த்துச் சொல்லுகின்றது.

"இயன்ற எல்லாம் பயின்று. அகத்தடக்கிய வேத முதல்வன் என்ப.”

என்பது இந்த உண்மையைப் புலப்படுத்தும் அடிகள். "இயன்ற எல்லாம் பயின்று என்பது அவனுடைய சர்வாந்தர்யாமித்துவத்தையும், 'அகத்து அடக்கிய என்பது அவனுடைய சர்வ வியாபகத்தையும் குறிப்பிடுகின்றன. அவன் எங்கும் பரந்திருக்கிறான்.