பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

வேண்டும்; கண்டு நன்றியுரை சொல்ல வேண்டுமென்று நினைப்போம்; எப்படியாவது அவரைக் கண்டு பணிய வேண்டும் என்று நம் உள்ளம் துடிக்கும்.

ஆனால் தனுகரணபுவன போகங்களை நமக்கு உதவி வரும் இறைவனைக் காண வேண்டும் என்ற எண்ணம் எழுவ்தில்லை. அவனைக் காண முடியாது என்று யாராவது சொன்னால், அதையே வியாஜமாக வைத்துக் கொண்டு சும்மா இருந்து விடுகிறோம். இது நியாயமா? முறையா?

எல்லோரும் அப்படி இருப்பதில்லை. சில பேராவது அந்தப் பரோபகாரியை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவாவுகிறர்கள்; பேரார்வம் கொள்கிறார்கள். “அத்தா, காண ஆசைப்பட்டேன் கண்டாய். அம்மானே!” என்று கூறும் மணிவாசகரைப் போலத் துடிக்கிறார்கள். அவர்களைத்தான் பக்தர்கள் என்று சொல்கிறோம்.

உலகில் உள்ள பொருள்களுக்காக ஆசைப்பட்டு, அவற்றை அடைய முயன்று, அவற்றுக்காக அல்லற்பட்டு வாழ்நாளை விணாக்குகிறவர்களே அதிகம். அவர்கள் செல்லும் மார்க்கம், அவர்கள் உழைத்து முன்னேறுவதாக எண்ணும் நெறி, சிறு நெறிச் சிறிய லாபத்தை, இன்றிருந்து நாளை அழியும் பொருளை அடைய நடைபோடும் நெறி. அந்தச் சிறு நெறியில் செல்லச் செல்ல மேலும் மேலும் ஆசை விரியுமேயன்றிச் சுருங்காது. அந்த ஆசையால் மயக்கம் ஏற்படும்; ஆதலால் அது மருள் நெறி. நாம் செல்ல வேண்டிய நெறி அன்று அது; அது நெறியல்லாத நெறி. அந்த நெறியைக் கடைப்பிடித்து ஒழுகிறவர்களுக்கு உய்வு இல்லை. பிறப்பு இறப்புகளில் புகுந்து புகுந்து தடுமாற வேண்டியதுதான். அப்படியின்றி இறைவனை உணர்ந்து அவன் அருளைச் சேர எண்ண வேண்டும். திருவாசகம் இதைச் சொல்கிறது.

“நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம்”