பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



301

என்பது ஒரு பாசுரம். பெரும்பாலான மக்கள் செல்லும் நெறி, நெறியல்லா நெறி; சிறு நெறி; அதனால் வரும் பயன் சிறு பயன். அன்பர்கள் சிறு நெறியில் செல்வதை வெறுப்பார்கள். பெரு நெறியையே பேணுவார்கள்.

பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும்” என்பது இராமலிங்க வள்ளலார் வாக்கு. இறைவன் அடிபணிந்து வழிபடும் அப்பெரு நெறியையே வேண்டுவார்கள் மெய்யன்பர்கள்.

“நாயினேன் உனை நினையவும் மாட்டேன்
நமச்சி வாய என்று உன்அடி பணியாப்
பேய னாகிலும் பெருநெறி காட்டாய்”

என்று மாணிக்கவாசகர் வேண்டுகின்றார்.

அன்பர்கள் இந்த ஜீவயாத்திரையில் இறைவனை அடைவதையே லட்சியமாகக் கொண்ட பெரு நெறியைப் பற்றி ஒழுகுவார்கள்; அந்த நெறியிற் செல்வதற்கு மாறாக எதையும் செய்ய மாட்டார்கள்; அந்தப் பெரு நெறிப் பயணத்தையே கண்ணும் கருத்துமாகப் பேணுவார்கள்.

அத்தகைய அன்பர்கள் சிலர் காரைக்கால் அம்மையாரை அணுகுகிறார்கள். அவர்கள் பரோபகாரியாகிய எம்பிரானை நோக்கும் பேராவலால் உந்தப்பட்டு, அவன் அருளுக்காக ஏங்கும் பெரு நெறியைப் பேணுகிறவர்கள்.

பிரான் அவனை நோக்கும் பெருநெறியே பேணி.

சிறுநெறிகளைக் சேராமல், மேலும் மேலும் பெரு நெறியில் முன்னேறிச் செல்வதுதான் பேணுதல்; தாம் கொண்ட கடைப்பிடியை விடாமல் பற்றித் தளர்வடையாமல் திண்மையோடிருப்பதையே பேணுதல் என்று சொல்ல வேண்டும். அந்த அன்பர்கள் அத்தகையவர்கள்.