பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

அவர்கள் இன்னும் அவனை அடையவில்லை. அவன் நெடுந்தூரத்தில் இருக்கிறான். இவன் என்று சுட்டிக்காட்ட முடியாத சேய்மையில் அவனாகவே இருக்கிறான். எவ்வளவு சேய்மையிலிருந்தாலும் அவன் செய்யும் உபகாரம் நம்மை வந்து அடைகிறது. அவன் நாம் பெற்றுள்ளவற்றையெல்லாம் தந்த பிரான். ஆனால் தன்னைப் பெறும் பாக்கியத்தை அவன் அருளவில்லை. இன்னும் சேய்மையில் அவனாக இருக்கிறான்.

என்றாலும், அவனை அடையவேண்டும்: நோக்க வேண்டும்; என்ற ஆர்வம் தணியவில்லை; ஒருகாலைக்கு ஒருகால் வளர்ந்து கொண்டே வருகிறது. அதனால் அந்தப் பெருநெறியினின்று அகலாமல், அதுவே தம் குறிக்கோளை அடைவதத்குரிய உபாயமென்று அன்பர்கள் சென்று கொண்டே இருக்கிறார்கள்; பிரான் அவன் தன் பெரு நெறியையே பேணுகிறவர்களாக இருக்கிறார்கள்.

அன்பு என்பது தொடர்புடையவரிடம் செல்லும் உணர்வு. உலகத்தில் அன்புடையவர்கள் அதிகமாக இருப்பதில்லை; அருளுடையவரோ மிகச் சிலர். அவர்களுடைய உலக மக்களைச் சார்ந்தவர்களாதலின் அவர்களுடைய அருளுக்கும் எல்லை உண்டு. அவர்களுடைய செல்வம், கல்வி, ஆற்றல் ஆகியவற்றை அவர்கள் இன்னார் இனியார் என்று பாராமல் யாவருக்கும் வழங்குகிறார்கள். அது மிகமிகச் சிறந்த பண்பு. என்றாலும் அவர்கள் படைத்த செல்வம் முதலியன ஒரு வரையறைக்கு உட்பட்டது. அதனால் அவர்கள் அருளால், பயன் பெறும் பரப்பும் எல்லைக்குள் அகப்பட்டதாகவே இருக்கும்.

எல்லையிறந்த ஆற்றலும் பண்புகளும் உடைய ஒருவன் செய்யும் அருள்தான் எல்லையில்லாத அருளாக, பேரருளாக, இருக்கும். பெரிய வள்ளலாகிய ஆண்டவன்தான் அத்தகைய நிலையில் உள்ளவன். ஆகவே அவன் கூட்டும் அருள்தான் பேரருள்; அவன் பேரருளாளன்.