பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

டிருக்கும் பயணத்துக்கு முடிவு எங்கே? தக்கவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு அன்பர்கள் வருகிறார்கள். இப்போது அவர்களுக்குக் காரைக்காலம்மையாருடைய நினைவு வருகிறது. அவரைக் காட்டிலும் சிறந்த வழிகாட்டி கிடைப்பதருமை என்று எண்ணி அவரை அணுகுகிறார்கள். 'எம்பெருமான் எங்கே இருக்கிறான்? அவனைக் கண்டு அவன் பேரருளைப் பெறவேண்டும்” என்று பணிந்து வேண்டுகிறார்கள்.

காரைக்காலம்மையார் அவர்களை ஏறெடுத்து நோக்குகிறார். அவர்களுடைய உண்மையான ஆர்வம் அவருக்குத் தெரிகிறது. அவர்கள், ‘பிரான் அவனை நோக்கும் பெரு நெறியே பேணி, பிரான் அவன்றன் பேரருளையே வேண்டி’ நிற்கிறவர்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்கிறார். இப்போது பிரான் அவனை எங்குற்றான்? என்று அவர்கள் கேட்கிறார்கள்?

“நீங்கள் எங்கே தேடினீர்கள்?” என்று வினவுகிறார் அம்மையார்.

“எங்கெங்கோ தேடினோம். தேடின இடங்களுக்குக் கணக்கில்லை. எங்கும் அவன் இருந்தாலும் நாங்கள் நோக்கும் வகையில், அகப்படவில்லை. தாங்கள் அவனை நோக்கிப் பேரருளைப் பெற்றவர்களாயிற்றே! ஆதலால் தங்களை அணுகி வந்தோம். அவன் எங்கே இருக்கிறான்? சொல்லியருளுங்கள்.”

அம்மையார் புன்னகை பூக்கிறார். அருளுடன் அவர்களைப் பார்க்கிறார்.

பிரான் அவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரான் அவன்றன் பேரருளே வேண்டிப்—பிரான்
அவனை எங்குற்றான் என்பீர்கள்

அல்லவா? என்று மறுபடியும் கேட்கிறார். அவர்கள், “ஆம் ஆம்!” என்று தங்கள் பேரார்வம் தோன்றச் சொல்கிறர்கள்.