பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

307

பிரானை எங்கே இருக்கிறான்? என்று கேட்கிறீர்கள்; அவன் இங்கே, என் போல்வார் உள்ளத்திலும் இருக்கிறான். ஆர்வத்தோடு உள்ளே காணுபவர்களுக்கு அவனுடைய காட்சி எளிதாக அமையும்.

பிரான்-உபகாரி. அவன் என்றது இறைவனைக் குறித்தது. 'அவனன்றி ஓரணுவும் அசையாது, என்ற பழமொழியில் அவன் என்பது சுட்டுச் சொல்லாக இருந்தாலும் இறைவன் என்ற பொருளையே உணர்த்தல் காண்க. பெரு நெறியே; ஏகாரம், பிரிநிலை; வேறு நெறியில் செல்லாமல் என்ற குறிப்பை உடையது. பேணி - தளர்ச்சியின்றிக் கடைப்பிடித்து. பேரருளே; ஏகாரம், பிரிநிலை; மற்றவர் அருளை விரும்பாமல் என்ற கருத்தை உடையது. அவனைப் பற்றி இவ்வாறு கேட்பீர்கள். பிரான் அவனை என்பது அம்மையார் கூற்று. எங்குற்றான் என்பது அன்பர்கள் கேள்வியைக் கொண்டு கூறியது. இங்கு, என்போல்வார் சிந்தையினும் என்று அந்வயித்துப் பொருள் கொள்க. சிந்தையினும் என்ற உம்மை, எச்ச உம்மை, எங்கும் இருப்பதையும் எண்ணச் செய்தது. காண்பார்க்குக் காட்சி எளிது என்று ஒரு சொல் வருவித்து முடிக்க வேண்டும். ‘அவன் எளிது’ என்றால் திணை வழுவாகிவிடும்.

உண்முக நோக்கத்தால் இறைவனைக் காணலாம் என்பது கருத்து.

"வானத்தான் என்பாரும் என்க; மற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாம்என்க: ஞானத்தான்,
முன்நஞ்சத் தால் இருண்ட மொய் ஒளிசேர் கண்டத்தான்,
என்நெஞ்சத் தான்என்பன் யான்” (6)

என்று முன்பும் இக்கருத்தை வேறு வகையாக அம்மையார் சொல்லியிருக்கிறார்.

அற்புதத் திருவந்தாதியில் 45-ஆவது பாடல் இது.