பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



47. எளிய செயல்


இறைவனுடைய திருவருளைப் பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் நெஞ்சார அதற்கு ஆசைப்படுகிறவர் மிகமிகக் குறைவு. அவர்களுக்குக் கண் முன்னால் உள்ள பிரபஞ்சப் பொருள்களின் மேல்தான் ஆசை அதிகமாக இருக்கிறது. இந்திரியங்களுக்குச் சுகம் தருகின்ற பொருள்களில்தான் அவர்களுடைய நாட்டம் செல்கிறது. அவன் விருந்து உண்ணுகிறான்; நாமும் உண்ண வேண்டும். அவன் பட்டுக் கட்டுகிறான்; நாமும் கட்டவேண்டும். அவன் மனைவி மக்களுடன் வாழ்கிறான்; நாமும் வாழ வேண்டும் என்பன போன்ற சிந்தனையே மக்களிடம் இருக்கிறது. அதிகமாகப் பொருளை ஈட்டி, அந்தப் பொருளால் அதிகமான பண்டங்களைச் சேமித்து, அதிகமான வசதிகளை அனுபவிக்க வேண்டும் என்றே யாவரும் முயல்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் இந்த ஆசையே நிரம்ப இருக்கிறது.

இந்த உலகியல் இன்பத்தை நுகர்வதற்காக மனிதன் ஒவ்வொரு கணமும் உழைத்துக்கொண்டே இருக்கிறான். தன் கருவி கரணங்களையும், அறிவையும், பெற்ற பொருளையும் பலவகையில் ஈடுபடுத்தி இந்திரிய சுகத்தைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறான் ; பிறவி தோறும் அலைந்துகொண்டே இருக்கிறான்.

“உள்ளங்கால் வெள்ளெலும்பு தேய ஒருகோடி
வெள்ளங்கா லம்திரிந்து விட்டேனே”

என்று பட்டினத்தார் புலம்புகிறார்.