பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

வேண்டும். ஆனால் மனத்தினால் ஒன்றை நினைப்பதற்கு இத்தகைய சிரமங்கள் தேவை இல்லை. இருந்தபடியே நினைக்கலாம்.

நினைக்க வேண்டிய பொருள் எது? இறைவனை நினைக்க வேண்டும். அவனை எங்காவது பிரபஞ்சத்தைச் சுற்றித் தேடிக் கண்டுபிடித்து நினைக்க வேண்டுமா? அவனை எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும், எந்தக் காலத்திலும் நினைக்கலாம். அதற்காகத் தனியான முயற்சிகளைச் செய்ய வேண்டியதில்லை.

யாரேனும் ஒரு பெரிய மனிதரை நம் வீட்டுக்கு அழைக்க எண்ணுகிறோம். அவருக்கு வரவேற்பு அளித்துத் தக்க ஆசனத்தில் இருத்தி உபசாரம் செய்ய வேண்டும். அதற்காக வீட்டைச் சுத்தப்படுத்திக் கோலம் போடுகிறோம். இரவலாகவாது ஏதேனும் விரிப்பை வாங்கி வந்து விரிக்கிறோம். பலகை போடுகிறோம். ஊதுவத்தி கொளுத்தி வைக்கிறோம். சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்கிறோம்.

நம் மனத்தில் இறைவனை நினைக்க, அவனை நம் சிந்தையுள்ளே அழைத்து வர, இப்படியெல்லாம் முன் ஏற்பாடு ஏதும் செய்ய வேண்டாம். நம் சிந்தையை அலங்கரிக்க வேண்டாம். இறைவன், நம்மை யார் எப்போது, அழைக்கிறார்? என்று காத்துக் கிடக்கிறான். நம் மனமாகிய வீட்டுக்குள் நுழைய வேண்டுமென்று அதற்கு ஏற்றபடி, கோலம் கொண்டிருக்கிறான். அவன் பரம சூட்சுமமான பரம்பொருளானாலும் நம் சிந்தையிலே குடிகொள்ள வேண்டிய வடிவங்களை எடுத்து வருகிறான். அவனுடைய திருமேனி பலவானாலும் நமக்கு எந்த வடிவம் மனம் கவருவதாக இருக்கிறதோ, அந்த வடிவத்தை நினைத்தால், அப்படியே வந்து சிந்தையுள் குடி புகுவான்.

இவ்வளவு எளிதாக அவன் வரும்போது, நாம் எளிதில் எந்த முயற்சியும் இன்றி வெறுமனே நினைத்தால் போதும் என்ற நிலை இருக்கும்போது, நாம் சும்மா இருக்கலாமா?